ஹோர்முஸ் நீரிணையை மீளத் திறக்க பிரிட்டன் தலைமையில் 30 நாடுகள்!

லெபனான் போர்நிறுத்த உடன்பாட்டுக்கு இணங்க, ஹோர்முஸ் நீரிணை வழியாக அனைத்து வணிகக் கப்பல்களும் தடையின்றிச் செல்லலாம் என்று ஈரானிய வெளியுறவு அமைச்சர் அபாஸ் அராக்சி அறிவித்துள்ளார்.

போர்நிறுத்தக் காலம் முடியும்வரை இந்த அனுமதி நடப்பில் இருக்கும் என அவர் இன்று வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 17) தெரிவித்தார்.

இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்ட பதிவில், “ஈரானின் துறைமுகங்கள், கடல்சார் அமைப்பு ஏற்கெனவே அறிவித்துள்ள ஒருங்கிணைந்த வழித்தடத்தைப் பின்பற்றியே கப்பல்களின் போக்குவரத்து அமையும்,” என்றார்.

இஸ்ரேலுக்கும் லெபனானுக்கும் இடையே அமெரிக்காவின் ஆதரவுடன் எட்டப்பட்டுள்ள போர்நிறுத்த ஒப்பந்தம், அமெரிக்கா, ஈரான் இடையிலான விரிவான பேச்சுவார்த்தைக்கு வழிவகுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இருப்பினும், இந்த ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக இஸ்ரேலியப் படைகள் தெற்கு லெபனானின் உட்பகுதிகளில் தொடர்ந்து நிறுத்தப்பட்டிருக்கும்.

திரு அராக்சியின் அறிவிப்பைத் தொடர்ந்து கச்சா எண்ணெய் விலை வெள்ளிக்கிழமை 9 வீதம் வீழ்ச்சி அடைந்தது.