அரச ஊழியர்களுக்கு 2027 பட்ஜட்டிலும் சம்பளவுயர்வு கிடைக்கும் என்று அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
2027ஆம் ஆண்டுக்கான வரவு–செலவுத் திட்டத்தின் ஊடாக அரச ஊழியர்களின் சம்பளத்தை மீண்டும் அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
வாராந்த அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.
2025 மற்றும் 2026ஆம் ஆண்டுகளிலும் அரச ஊழியர்களுக்கான அடிப்படை சம்பளத்தை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டார். அதன்படி, 2025ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் மேற்கொள்ளப்பட்ட சம்பளத் திருத்தத்தைத் தொடர்ந்து, 2026ஆம் ஆண்டிலும் சம்பள அதிகரிப்பு வழங்கப்பட்டதாக அமைச்சர் தெரிவித்தார்.
நாட்டின் பொருளாதார நிலைமை படிப்படியாக மீட்சியடைந்து வருவதால், அரசாங்கத்திற்கு கிடைக்கும் வருமானத்தில் கணிசமான பகுதியை அரச அதிகாரிகளின் சம்பளம் மற்றும் கொடுப்பனவுகளுக்காக ஒதுக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அவர் கூறினார்.
மிகவும் சவாலான பொருளாதார சூழ்நிலையில் நாட்டை பொறுப்பேற்ற போதிலும், தற்போது பொருளாதாரம் படிப்படியாக மீட்சியடைந்து வருவதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
இதன் அடிப்படையில், 2027ஆம் ஆண்டிலும் அரச ஊழியர்களின் அடிப்படை சம்பளம் மற்றும் கொடுப்பனவுகளை அதிகரிக்க எதிர்பார்ப்பதாக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ மேலும் தெரிவித்தார்.
எஸ். ஆர். இரவீந்திரன்
