மன்னார் மடு அன்னையில் வருடாந்த ஆவணித் திருவிழா சனிக்கிழமை (15) நடைபெறுகிறது.
வரலாற்றுச் சிறப்புமிக்க மன்னார், மடு அன்னையின் வருடாந்த ஆவணித் திருவிழா திருப்பலி சனிக்கிழமை (15) காலை 6.15இற்கு ஆயர்களின் தலைமையில் கூட்டுத் திருப்பலியாக ஒப்புக்கொடுக்கப்படும்.
மன்னார் மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை அந்தோனிப்பிள்ளை ஞானப்பிரகாசம் ஆண்டகை, கொழும்பு உயர் மறைமாவட்ட பேராயார் கர்தினால் மல்க்கம் ரஞ்சித் ஆண்டகை, பதுளை மறைமாவட்ட ஆயர் அருட்கலாநிதி யூட் நிஷாந்த சில்வா ஆண்டகை ஆகியோர் திருவிழாத் திருப்பலிக்கு தலைமை தாங்குவார்கள்.
தமிழ். சிங்களம், இலத்தீன் மொழிகளில் திருவிழாத் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்படும். திருவிழாத் திருப்பலியைத் தொடர்ந்து மடு அன்னையின் திருச்சொரூப பவனி நடைபெறும்.
திருச்சொரூப பவனியின் நிறைவில் பக்த அடியார்களுக்கு மடு அன்னையின் திருச்சொரூப ஆசீர்வாதம் வழங்கப்பட்டு திருவிழா நிறைவடையும்.
மடு அன்னையின் வருடாந்த ஆவணித்திருவிழா கடந்த ஆறாம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.
பக்தர்களின் வசதி கருதி தங்குமிடம், உணவு, போக்குவரத்து, பாதுகாப்பு உள்ளிட்ட விசேட ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கின்றன.
திருத்தலத்திற்கு வரும் பக்தர்கள் களியாட்ட நிகழ்வுகள் உள்ளிட்ட தேவையற்ற விடயங்களில் ஈடுபடுவதை முற்றாக தவிர்த்துக் கொள்ளமாறு மன்னார் மறைமாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை கிறிஸ்து நேசன் அடிகளார் கேட்டுக்கொண்டுள்ளார்.
மன்னார் ஜோசப் பெர்னாண்டோ
