இரத்தினபுரி மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக்கூட்டம், இரத்தினபுரி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவருமான சாந்த பத்மகுமாராவின் தலைமையில் இரத்தினபுரி மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில்நேற்று (14) நடைபெற்றது
இரத்தினபுரி மாவட்ட செயலாளர் லலித் ஆனந்தவின் ஏற்பாட்டில் நடைபெற்ற இக்கூட்டத்தில், “சபரகமுவை சவிய கடன்” திட்டம் குறித்து சபரகமுவை மாகாண காணி, பாசன, விவசாய, கால்நடை உற்பத்தி, கால்நடை சுகாதாரம், மீன்பிடி அமைச்சின் செயலாளர் தர்ஷன சமரசேகரவினால் முறையாக விளக்கமளிக்கப்பட்டது.
இக்கடன் திட்டத்திற்காக 270 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதுட. விவசாயம், கால்நடை உற்பத்தி, அலங்கார மீன் வளர்ப்பு, நன்னீர் மீன்பிடி உள்ளிட்ட பல துறைகளுக்காகக் குறைந்தபட்சமாக 25,000 ரூபாயிலிருந்து அதிகபட்சமாக 05 மில்லியன் ரூபாய் வரை கடன் வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளது என்றும், இதற்கு 03% என்ற மிகவும் குறைந்த வட்டியே அறவிடப்படும் என்றும் திரு. சமரசேகர தெரிவித்தார்.
மேலும், இதற்காகச் சபரகமுவை மாகாண விவசாய அமைச்சின் செயலாளரின் 01/2026 ஆம் இலக்க சுற்றறிக்கையும் வெளியிடப்பட்டுள்ளது.
அத்துடன், தனியார் முதலீடாகச் செயற்படுத்த முன்மொழியப்பட்டுள்ள இரத்தினபுரி, வெரளுப்ப நீர் பூங்கா மற்றும் நீர் விளையாட்டு, பொழுதுபோக்கு மையக் கட்டுமானத் திட்டம் குறித்தும் இங்கு குழுவுக்குத் தெளிவுபடுத்தப்பட்டதுடன், ஏனைய தொடர்புடைய அரச நிறுவனங்களின் அனுமதிகளுக்கு உட்பட்டு, அதன் கட்டுமானத் திட்டத்திற்கு ஒருங்கிணைப்புக் குழுவின் முதற்கட்ட உடன்பாடு வழங்கப்பட்டது.
மேலும், வே கங்கையைச் (Wey Ganga) சூழவுள்ள பகுதிகளில் இடம்பெறும் சட்டவிரோத மாணிக்கக் கல் அகழ்வு நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்துவதற்காக, மாணிக்கக் கல் மற்றும் ஆபரண அதிகாரசபையும் இலங்கை பொலிஸாரும் இணைந்து கூட்டுச் சோதனைகளை மேற்கொள்வதற்கும், குறிப்பாகச் சந்தேகநபர்களுக்கு எதிராகக் கடுமையான சட்ட நடவடிக்கை எடுப்பதற்கும் தீர்மானிக்கப்பட்டது.


இதுதவிர, கல்வி, விளையாட்டு, நெடுஞ்சாலைகள், விவசாய சேவைகள், விவசாயம், சுற்றாடல், வனவிலங்கு மற்றும் வனப்பாதுகாப்பு, சுற்றுலா உள்ளிட்ட பல்வேறு துறைகளின் அபிவிருத்தி நடவடிக்கைகள் குறித்தும் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் கவனம் செலுத்தப்பட்டது.
இம்மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம், மாவட்டப் பணிப்பாளர் (திட்டமிடல்) திரு. எம்.கே.எல். ஜயசிங்க உள்ளிட்ட மாவட்டத் திட்டமிடல் பிரிவினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்நிகழ்வில் இரத்தினபுரி மாவட்டக் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான திரு. சுனில் ராஜபக்ஷ, வைத்தியர் ஜனக சேனாரத்ன, சட்டத்தரணி நிலூஷா லக்மாலி, சட்டத்தரணி ஹெஷா வித்தானகே, இரத்தினபுரி மாநகர முதல்வர் திரு. இந்திரஜித் கட்டுக்கம்பல ஆகியோருடன் பல அரச அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.
இரத்தினபுரி நிருபர் எஸ். ஆர். இரவீந்திரன்
