மத்திய கிழக்கில் நிலவும் போர்ச்; சூழலால் எழுந்துள்ள சவால்களுக்கு மத்தியில், எரிசக்தியை முறையாக முகாமைத்துவம் செய்து, நாட்டின் பொருளாதாரச் செயல்முறை மற்றும் அத்தியாவசிய சேவைகளைத் தடையின்றி முன்னெடுப்பதற்கான திட்டங்கள் செயல்படுத்த இருப்பதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
வலுசக்தி விநியோகத்தில் ஏற்பட்டுள்ள தடைகளைக் கருத்தில் கொண்டு, நாட்டின் வலுசக்தி பாதுகாப்பை உறுதிப்படுத்துவது குறித்தும், அத்தியாவசிய சேவைகளைத் தொடர்வதற்கு எடுக்கப்பட வேண்டிய அவசர நடவடிக்கைகள் குறித்தும் ஆராயும் கலந்துரையாடல் நேற்று (16) மாலை ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது.
துறைசார்ந்த அமைச்சர்கள் மற்றும் அமைச்சுக்களின் செயலாளர்களின் பங்கேற்புடன் நடைபெற்ற இந்த கலந்துரையாடலில் தற்போதைய சூழ்நிலையில் அரச சேவைகளைத் தடையின்றி முன்னெடுப்பது குறித்து முக்கியமாக ஆராயப்பட்டது.
அரச அலுவலகங்களை செயற்படுத்துவதில் பின்பற்ற வேண்டிய மாற்றுவழிகள் குறித்தும் விரிவாக ஆராயப்பட்டதோடு அரச ஊழியர்களுக்கு வாரத்தில் ஒரு நாள் விடுமுறை வழங்குவதன் ஊடாக வலுசக்தி நுகர்வைக் கட்டுப்படுத்தி சேவைகளை முன்னெடுப்பது தொடர்பாகவும் ஆலோசிக்கப்பட்டது.
குறிப்பாக கல்வி, சுகாதாரம், சுற்றுலா, மீன்பிடி, கைத்தொழில், விவசாயம், துறைமுகம், விமான நிலைய சேவைகள் மற்றும் டிஜிட்டல் சேவைகள் போன்ற துறைகளின் முக்கியத்துவத்தைக் கருத்தில் கொண்டு, குறைந்தபட்ச வலுசக்தி நுகர்வை உறுதிப்படுத்தும் வகையில் அந்த சேவைகளை முன்னெடுப்பத்திற்கு தற்பொழுது மேற்கொள்ளக் கூடிய மாற்றுவழிகள் குறித்தும் ஆராயப்பட்டது.
முக்கிய துறைகளில் சேவைகளைத் தொடர்ச்சியாக முன்னெடுத்துச் செல்வதற்காக வழங்கப்பட வேண்டிய எரிபொருளின் அளவைத் தீர்மானிப்பதற்கு, அமைச்சின் செயலாளர்கள் மற்றும் அந்தந்தத் துறைகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் நிபுணர்களைக் கொண்ட குழுவொன்றின் மூலம் அறிக்கையொன்றைச் சமர்ப்பிக்குமாறு ஜனாதிபதி அறிவுறுத்தினார்.
