மஸ்கெலியா தபாற் கந்தோர் வீதியில் உள்ள ஆயுர் வேத மருந்தகத்தில்
பொலிஸார் நடத்திய சுற்றிவளைப்பில் மற்றொரு தொகை போதை கலந்த மதன மோதகச் சுருள்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
மஸ்கெலியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி புஷ்பகுமாரவின் பணிப்புரைக்கு அமைய பொலிஸ் சார்ஜன்ட் ருக்மல்,கொன்ஸ்டபிள் நவ்ஷாட் ஆகியோர் மேற்கொண்ட சுற்றி வளைப்பின் போது கஞ்சா கலவை செய்த மதன மோதகம் 851 சுருள்கள் கைபற்றப்பட்டன. இதையடுத்து வர்த்தக நிலையத்தின் உரிமையாளர் கைதுசெய்யப்பட்டார். இந்தச் சம்பவம் இன்றிரவு (25) எட்டு மணிக்கு இடம்பெற்றது.
கைது செய்யப்பட்டவர் நாளை 26 ஆம் திகதி ஹட்டன் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்த உள்ளதாக மஸ்கெலியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எஸ் எஸ் புஷ்பகுமார தெரிவித்தார்.
இவ்வாறு போதைப் பொருள் விற்பனை செய்து வந்தவர் எம்பிலிபிட்டி பிரதேசத்தைச் சேர்ந்தவர் ஆவார்.
பாடசாலை மாணவர்கள், இளைஞர்களை மையமாகக் கொண்டு கடந்த சில நாள்களாக இந்த ஆயுர்வேத மருந்தகத்தை மஸ்கெலியா நகரில் உள்ள பேருந்து நிலைய பகுதியில் புதிதாக ஆரம்பித்து மதன மோதகம் விற்றவர் கடந்த வாரம் கைதுசெய்யப்பட்டார்.
ஒரே வாரத்தில் இரண்டாவது தடவையாக மஸ்கெலியா பொலிஸார் மேற் கொண்ட சுற்றி வளைப்பின்போது இன்று இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மஸ்கெலியா நிருபர் செ. தி. பெருமாள்
