கட்டணங்களை அதிகரிக்க வேண்டாம் என நிலைய அதிபர்கள் கோரிக்கை

வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு, எரிபொருள் விலை உயர்வு காரணமாக மக்கள் பெரும் சிரமங்களை எதிர்நோக்கியுள்ளனர். அதனால், ரயில் பயணக் கட்டணங்களை எவ்விதத்திலும் அதிகரிக்க வேண்டாமென இலங்கை ரயில் நிலைய அதிபர்கள் சங்கம் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது.

ரயில் நிலைய அதிபர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் கசுன் சாமர ஜயசேகர இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளதாக செய்தி வெளியாகி உள்ளது.

பொருளாதார நெருக்கடி, பேருந்து பயண கட்டண உயர்வு காரணமாக, பெருமளவிலான மக்கள் தற்போது ரயில் போக்குவரத்தையே நம்பியுள்ளனர்.

மத்திய கிழக்கு போர்ச் சூழலால் உலக சந்தையில் எரிபொருள் விலை அதிகரித்துள்ளமையால் நாட்டின் போக்குவரத்து, சேவைக் கட்டணங்களை உயர்த்த வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளது.

பொதுமக்களுக்கு குறைந்த செலவில் போக்குவரத்து சேவையை வழங்க வேண்டிய விசேட பொறுப்பு ரயில்வே திணைக்களத்திற்கு உள்ளது.

ரயில் சேவையை மேம்படுத்துவது குறித்து ஜனாதிபதியிடம் முன்மொழிவுகள் சமர்ப்பிக்கப்பட்ட போதிலும், இதுவரை அதற்கு எவ்வித பதிலும் கிடைக்கவில்லை.

நெருக்கடியான தற்போதைய சூழலில் ரயில் பயணக் கட்டணங்களை உயர்த்துவது பொதுமக்களை மேலும் பாரிய நெருக்கடிக்குள் இட்டுச் செல்லும் என்பதில் எந்தவித ஐயமும் இல்லை என ரயில் நிலைய அதிபர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.