WhatsApp Image 2026-03-16 at 14.27.22

தேசிய நிகழ்ச்சியாக நடைபெறும் கிளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டத்தின் கீழ் தேசத்தினைக் கட்டியெழுப்புகின்ற வளமான கிராமம் சமூக உற்பத்திக்கான மாதிரி கிராமங்களுக்கான அங்குரார்ப்பண நிகழ்ச்சி இன்று மட்டக்களப்பு மாவட்டத்தின் 14 பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் ஆரம்பித்துவைக்கப்பட்டது.

மாவட்டத்தின் பிரதான நிகழ்ச்சி மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் சத்துருக்கொண்டான் கிராம சேவையாளர் பிரிவுக்குட்பட்ட லங்காபுரம் கிராமத்தில் நடைபெற்றது.

மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் திருமதி சிவப்பிரியா வில்வரெட்னத்தின் ஒழுங்கமைப்பில் மாவட்ட அரசாங்க அதிபர் ஜே. எஸ். அருள்ராஜ் தலைமையில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் தேசிய மக்கள் சக்தியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு பிரதம அதிதியாக கலந்துகொண்டார். கிளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டத்தின் மட்டக்களப்பு மாவட்ட இணைப்பாளர் பேவியன் பார்திலட், மட்டக்களப்பு மாநகர சபை உறுப்பினர்கள்,மண்முனை வடக்கு உதவி பிரதேச செயலாளர் திருமதி சதா சுதாகரன், மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் இ. உதயகுமார் உட்படப் பலர் கலந்துகொண்டனர்.

அப்போது உற்பத்தி கிராமத்திற்கான திட்ட முன்மொழிவுகள் அதிதிகளுக்கு வழங்கப்பட்டதுடன் கிராமத்தின் பயனாளிகளுக்கான பழமரக்கன்றுகளும் வழங்கப்பட்டன. மாதிரிக் கிராம பெயர்ப்பலகையும் திரை நீக்கம் செய்யப்பட்டது.

கிராமிய உற்பத்திகள் மூலம் கிராமங்களின் தேவைகளை நிவர்த்தி செய்து தேசிய பொருளாதாரத்திற்கு வலு சேர்க்கும் வகையில் தேசத்தைக் கட்டியெழுப்புகின்ற வளமான கிராமம் சமூக உற்பத்திக்கான மாதிரி கிராமங்கள் தெரிவுசெய்யப்பட்டு அபிவிருத்திப் பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளன

இந்த வைபவத்தில் பிரதேச செயலகத்தின் உத்தியோகத்தர்கள், மாவட்டச் செயலக உத்தியோகத்தர்கள், கிராம பொது அமைப்புகள், பொதுமக்கள் எனப் பெருமளவானோர் கலந்துகொண்டனர்.

மட்டக்களப்பு வரதன்