மட்டக்களப்பில் மட்டக்களப்பு காணிப் பிரச்சினைக்கு தீர்வுகாண உயர்மட்டக் குழு

மட்டக்களப்பு காணிப் பிரச்சினைக்கு தீர்வு காண உயர்மட்டக் குழு ஒன்றை நியமிக்க இன்றைய விசேட உயர்மட்டக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

காணிப் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பது தொடர்பான விசேட உயர்மட்டக் கலந்துரையாடல், மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எஸ் அருள்ராஜ் தலைமையில் மாவட்ட செயலகத்தில் இன்று (17) நடைபெற்றது.

மாவட்டத்தில் மக்கள் எதிர்நோக்கும் காணிப்பிரச்சினைக்குத் தீர்வு காணும் பொருட்டு உயர்மட்ட விசாரணைக் குழுவொன்றை அமைக்க இந்தக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.

பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ், காணி மற்றும் கால்நடை வளர்ப்பு, விவசாய அமைச்சர் கே.டி லால் காந்த அவர்களிடம் விடுத்த வேண்டுகோளின்

அடிப்படையிலும், அமைச்சரின் ஆலோசனைக்கமையவும் இந்த அவசரக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இக்கூட்டத்தில், மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள், காணி ஆணையாளர் நாயகம், மாகாண காணி ஆணையாளர், மட்டக்களப்பு மாவட்ட அனைத்து பிரதேச

செயலாளர்கள் உள்ளிட்ட காணி அமைச்சின் உயர் அதிகாரிகள், மட்டக்களப்பு மாவட்டத்தின் திணைக்களத் தலைவர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.

நீண்டகாலமாக மட்டக்களப்பு காணிப் பிரச்சினைக்கு தீர்வு காணப்படவில்லை

இக்கலந்துரையாடலில் கருத்து தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் ஹிஸ்புல்லாஹ்:

மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் வாழும் முஸ்லிம் மக்கள் எதிர்நோக்கும் காணிப் பிரச்சினைகளை வரலாற்று ஆவணங்கள் மற்றும் சட்ட ஆதாரங்களுடன் விரிவாக எடுத்துரைத்தார்.

குறிப்பாக காரமுனை, பொத்தானை, கிரான், கோரளைப்பற்று வடக்கு வாகரை, கோரளைப்பற்று தெற்கு கிரான் உள்ளிட்ட பகுதிகளில் பல தசாப்தங்களாக வாழ்ந்து வரும் மக்களின் நிலை குறித்து அவர் கவனம் செலுத்தினார்

காத்தான்குடி, ஆரையம்பதி, மட்டக்களப்பு மாநகர சபை எல்லைப் பிரச்சினைகள் தொடர்பிலும் தெளிவுபடுத்தினார்.

காரமுனைப் பகுதியில் 60 முதல் 80 ஆண்டுகளுக்கும் மேலாக மக்கள் வசித்து வருவதாகவும், அங்கு பிறப்பு பதிவுகள், ஜனாஸா அடக்கப் பதிவுகள், 1967ஆம் ஆண்டில் பள்ளிவாசலும் பாடசாலையும் இயங்கியதற்கான

ஆவணங்கள், 1980களிலேயே காணி கோரி சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பங்கள் உள்ளிட்ட ஏராளமான ஆதாரங்கள் இருந்தபோதிலும், மட்டக்களப்பு காணிப் பிரச்சினைக்கு தீர்வாக

இதுவரை காணி உரிமங்கள் அல்லது தற்காலிக அனுமதிப்பத்திரங்கள்கூட வழங்கப்படவில்லை என அவர் சுட்டிக்காட்டினார்.

அந்தப் பகுதியில் முஸ்லிம் மக்களுக்கு மட்டும் அரச காணிகள் வழங்க மறுக்கப்படுவதாகவும், அவர்களை அப்பகுதியில் இருந்து

வெளியேற்றும் நோக்கில் நிர்வாக நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாகவும் அவர் குற்றஞ்சாட்டினார்.

மேலும், மக்கள் நீண்டகாலமாக அங்கு வாழ்ந்து வருவதை உறுதிப்படுத்தி பரிந்துரை வழங்கிய கிராம சேவை அதிகாரி உடனடியாக இடமாற்றம் செய்யப்பட்டதுடன், விதிகளுக்குட்பட்டு

மக்களுக்குச் சாதகமாக செயற்பட்டவர்கள் இடமாற்றம்

மக்களுக்கு சாதகமாகச் செயல்பட்ட காணிப் பொறுப்பதிகாரியும் மாற்றப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

இவ்வாறான இடமாற்றங்கள் மக்களுக்கு கடுமையான அநீதியை ஏற்படுத்துகின்றன எனவும் அவர் கவலை வெளியிட்டார்.

30 முதல் 40 ஆண்டுகளாக வாழும் மக்களுக்கு எதிராக வனவளத் திணைக்களம் தொடர்ச்சியாக வழக்குகள் தாக்கல் செய்து வருவதாகவும், குறித்த காணி வனவளத் திணைக்களத்திற்கு சொந்தமானது

அல்ல என நீதிமன்றம் தீர்ப்பளித்த பின்னரும், அரச காணி எனக் கூறி மீண்டும் மீண்டும் வழக்குகள் தொடரப்பட்டு மக்களை வெளியேற்ற முயற்சிக்கப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

அதேபோன்று, மாகாண காணி ஆணையாளரிடம் முறைப்பாடு செய்த ஐந்து குடும்பங்களின் வீடுகளிலும் வெளியேற்ற அறிவித்தல்கள் ஒட்டப்பட்டுள்ளதாகவும், இது நிர்வாக ரீதியான அச்சுறுத்தலாக அமைந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இந்த விவகாரம் இன அடிப்படையிலானதல்ல என்றும், மனிதாபிமான அடிப்படையில் பல தலைமுறைகளாக வாழ்ந்து வரும் மக்களின்

வாழ்வுரிமையை பாதுகாக்க வேண்டிய அவசியம் இருப்பதாகவும் அவர் வலியுறுத்தினார்.

1967ஆம் ஆண்டு முதல் பதிவு செய்யப்பட்ட பள்ளிவாசலும், அப்பகுதி மக்களின் தொடர்ச்சியான குடியிருப்பை உறுதிப்படுத்தும் ஆவணங்களும் இருப்பதால்,

குறைந்தபட்சம் ஆண்டு அனுமதிப்பத்திரமாவது (Annual Permit) வழங்கப்பட வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்தார்.

இதன்போது, சில தமிழ் பிரதிநிதிகள், குறித்த பகுதிகள் பூர்வீக தமிழ் கிராமங்கள் என்றும், அங்கு முஸ்லிம் மக்கள் குடியிருக்கவில்லை என்றும் தங்களது நிலைப்பாட்டை முன்வைத்தனர்.

இதற்கு பதிலளித்த ஹிஸ்புல்லாஹ், உண்மையை உறுதிப்படுத்த கொழும்பிலிருந்து சுயாதீன உயர்மட்ட விசாரணைக் குழுவொன்றை அனுப்புமாறு கோரினார்.

அந்தக் குழு நேரடியாக கிராமத்திற்குச் சென்று ஆய்வு செய்யட்டும். மக்கள் வாழ்ந்ததற்கான ஆதாரங்கள் இருந்தால், அவர்கள் எந்த இனத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும்

உரிய அனுமதிப்பத்திரங்களையும் காணி உரிமைகளையும் வழங்க வேண்டும். நான் முஸ்லிம்களுக்கு மட்டும் கேட்கவில்லை, உரிமையுள்ள அனைவருக்கும் வழங்கப்பட வேண்டும் என அவர் தெரிவித்தார்.

மேலும், வாகரை பிரதேச செயலகத்தின் மூலம் 4,800 தமிழ் குடும்பங்களுக்கு அரச காணிகள் வழங்கப்பட்டுள்ள நிலையில், பல தலைமுறைகளாக வாழும் ஒரு முஸ்லிம் குடும்பத்திற்குக்கூட

உறுதிக்காணி வழங்கப்படவில்லை என அவர் சுட்டிக்காட்டினார். தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் (RTI) மூலம் பெற்ற ஆவணங்கள்

உள்ளிட்ட பல ஆதாரங்களையும் கூட்டத்தில் சமர்ப்பித்ததாகவும் கூறினார்.

பொத்தானை உள்ளிட்ட பகுதிகளிலும் மக்கள் நீண்டகாலமாக வாழ்ந்துவரும் நிலையிலும், காணி உறுதிப்பத்திரங்கள் வழங்கப்படாமல்,

நீதிமன்றங்களில் பொய்யான வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டு வருவதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.

கூட்டத்தின் போது முன்வைக்கப்பட்ட அனைத்து குற்றச்சாட்டுகளுக்கும் ஹிஸ்புல்லாஹ் ஆவணங்கள் மற்றும் ஆதாரங்களுடன் விளக்கமளித்தார்.

இறுதியில், காணி ஆணையாளர் நாயகம் உடனடியாக உயர்மட்ட விசாரணைக் குழுவொன்றை நியமிப்பதாகவும், அந்தக் குழு ஒரு மாத காலத்திற்குள் தனது அறிக்கையை

மேலும் வாசிக்க: இராஜதந்திரிகளின் வருகை சுற்றுலா வளர்ச்சியின் அடையாளம்!

சமர்ப்பிக்க வேண்டும் என்றும் அறிவித்தார். அறிக்கையின் பரிந்துரைகளின் அடிப்படையில் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என அவர் உறுதியளித்தார்.

சில தரப்பினர், குழுவின் தீர்மானம் தங்களது இணக்கப்பாட்டுடன் மட்டுமே அமுல்படுத்தப்பட வேண்டும் என வலியுறுத்தியபோது, காணி ஆணையாளர் நாயகம்,

“அனைவரும் தங்களது ஆதாரங்களையும் விளக்கங்களையும் குழுவின் முன் சமர்ப்பிக்கலாம். ஆனால் இறுதித் தீர்மானம் குழுவின் ஆய்வின் அடிப்படையிலேயே எடுக்கப்படும்.

அந்தத் தீர்மானத்தையே நடைமுறைப்படுத்துவோம்” என்று தெளிவுபடுத்தினார்.

இக்கலந்துரையாடல் நிறைவில், பாதிக்கப்பட்ட மக்களின் காணிப் பிரச்சினைகளுக்கு சட்ட ரீதியாகவும் மனிதாபிமான ரீதியாகவும் விரைவான மற்றும் நியாயமான தீர்வுகளை

வழங்குவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என காணி அமைச்சின் அதிகாரிகள் உறுதியளித்தனர்.

— ஊடகப்பிரிவு

பேஸ்புக்கில் எம்மைப் பின்தொடர