உழவு இயந்திரத்தின் மீதேறிய டிப்பர்: சாரதி நூலிழையில் உயிர் தப்பினார்!

​மட்டக்களப்பு – கல்முனை பிரதான வீதியில் இன்று (பிப்ரவரி 28) உழவு இயந்திரம் ஒன்றின் மீது டிப்பர் வாகனம் ஏறி விபத்துக்குள்ளானதில், உழவு இயந்திரத்தின் சாரதி நல்வாய்ப்பாக உயிர் தப்பியுள்ளார்.

​மண்முனை தென் எருவில் பற்று (களுதாவளை) பிரதேச சபைக்குச் சொந்தமான டிப்பர் வாகனம் ஒன்று பழுதான நிலையில் இருந்துள்ளது.

அந்த வாகனத்தை பழுதுபார்ப்பதற்காக உழவு இயந்திரம் ஒன்றின் உதவியுடன் சங்கிலியால் கட்டி இழுத்துச் செல்லப்பட்டுள்ளது.

​களுவாஞ்சிகுடி பகுதியில் வீதியில் சென்றுகொண்டிருந்தபோது, பின்னால் இழுத்து வரப்பட்ட டிப்பர் வாகனம் எதிர்பாராத விதமாக வேகத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் முன்னால் சென்ற உழவு இயந்திரத்தின் மீது ஏறியுள்ளது.

​டிப்பர் வாகனம் தனது இயந்திரத்தின் மீது ஏறுவதைக் கண்ட உழவு இயந்திர சாரதி, சாமர்த்தியமாக கீழே குதித்துள்ளார்.

இதனால் அவர் எவ்வித காயங்களுமின்றி தெய்வாதீனமாக உயிர் தப்பினார். எனினும், இந்த விபத்தினால் உழவு இயந்திரம் பலத்த சேதமடைந்துள்ளது.

​​சம்பவ இடத்திற்கு விரைந்த களுவாஞ்சிகுடி பொலிஸார், விபத்து குறித்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

சா. நடனசபேசன்