கொழும்புவிலிருந்து மோட்டார் சைக்கிளில் நாவலப்பிட்டி பயணம் கினிகத்தேனையில் முடிந்தது அந்தப் பகுதியில் இன்று காலை பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
கொழும்பு, மருதானையிலிருந்து நாவலப்பிட்டி நோக்கிப் பயணித்த மோட்டார் சைக்கிள் அதே திசையில் பயணித்த லொறியை முந்திச் செல்ல முயன்றபோது ஏற்பட்ட விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
மோட்டார் சைக்கிளை ஓட்டிச் சென்ற அவரது கணவர் படுகாயமடைந்து நாவலப்பிட்டி மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கினிகத்தேன பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி விராஜ் விதானகே தெரிவித்தார்.
விபத்தில் உயிரிழந்தவர் கொழும்பு மருதானையைச் சேர்ந்த இரண்டு குழந்தைகளின் தாயாரான 44 வயதுடைய பெண் ஒருவர் என்று பொலிஸார் தெரிவித்தனர்.
ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியில் கினிகத்தேனை, மில்லகஹமுல பகுதியில் இந்த விபத்து இன்று காலை இடம்பெற்றது.
நாவலப்பிட்டி மாவட்ட பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் உறவினரைப் பார்வையிட இந்தத் தம்பதி மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளது.
அப்போது கொழும்புவிலிருந்து வட்டவளை நோக்கிச் சென்ற லொறியினை மோட்டார் சைக்கிள் முந்திச் செல்ல முயன்ற போது, லொறியின் இடது பக்கத்தின் நடுப்பகுதியில் மோட்டார் சைக்கிள் சிக்கிக் கொண்டது.
இதன்போது, மோட்டார் சைக்கிளில் பின் இருக்கையில் இருந்த பெண் லொறியின் இடது பின்புற சக்கரத்தின் கீழ் விழுந்து நசுங்கியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
மேலும் இந்த விபத்து இன்று வியாழக்கிழமை (31) அதிகாலை 5:45 அளவில் நிகழ்ந்ததாகப் பொலிஸார் தெரிவித்தனர்.
மோட்டார் சைக்கிளைச் செலுத்தியவரின் கவனக்குறைவே விபத்துக்குக் காரணம் என்றும், சந்தேகத்தின் பேரில் லொறியின் சாரதியைக் கைது செய்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்த பெண்ணின் சடலம் டிக்கோயா ஆதார வைத்தியசாலையின் சட்ட மருத்துவ பரிசோதகரிடம் பிரேத பரிசோதனைக்காக ஒப்படைக்கப்பட்டது.
மோட்டார் சைக்கிளில் நாவலப்பிட்டி பயணம் கினிகத்தேனையில் முடிந்தது பற்றி கினிகத்தேன பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
ஹற்றன் க. கிருஷாந்தன்



