உகந்தைமலை முருகன் வருடாந்த கொடியேற்றத் திருவிழா

வரலாற்றுப் பழைமை கொண்ட உகந்தைமலை முருகன் வருடாந்த கொடியேற்றத் திருவிழா ஆரம்பமாகியுள்ளது..

கிழக்கிலங்கை புராதன வரலாற்றுச் சிறப்பும் பழைமையும் கொண்டு விளங்கும் உகந்தை மலை ஸ்ரீ முருகன் ஆலயக் கொடியேற்றம் மிகச் சிறப்பாக (25) வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இக்கொடியேற்றமானது ஆலய வண்ணக்கர் நிருவாக சபையினர், லாகுகல பிரதேச செயலகத்தின் இணை ஒழுங்கமைப்பில் சிவஸ்ரீ க. கு. சீதாராம் குருக்கள் தலைமையிலான கிரியா கால குருமார்களால் நடத்தப்பட்டது.

பூரண நிறை குடங்கள் வைத்து தெய்வங்களை ஆரோகணம் செய்து; அக்கி ஹோமங்கள் வளர்த்து; வேதாகமங்கள் ஒலிக்க; நாதேஸ்வர வாத்தியங்கள் முழங்க; பக்தர்களின் அரோகரா கோசத்துடன் சகொடிக்கம்பத்தில் கொடிச்சீலை ஏற்றப்பட்டது.

இதனைத் தொடர்ந்து கொடித்தம்ப அபிஷேகம் நடைபெற்றது. வள்ளி தெய்வானை சமேதராய் முருகப் பெருமான் எழுந்தருளி உள்வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தருளினார்.

இக்கொடியேற்றத் திருவிழா தொடர்ந்து 16 நாள்கள் நடைபெற்று எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 09 ஆம் திகதி சமுத்திரத் தீர்த்தோற்சவத்துடன் உகந்தைமலை முருகன் வருடாந்த கொடியேற்றத் திருவிழா நிறைவு பெறும்.

திருக்கோவில் நிருபர்-எஸ்.கார்த்திகேசு