சீன அரசால் கற்றல் உபகரணங்கள், உலர் உணவுப் பொதிகள் வழங்கல்

சீன அரசாங்கத்தின் நிதி ஒதுக்கீட்டில் மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் மற்றும் பெற்றோருக்கு உலர் உணவுப் பொதிகள் வழங்கல்

சீன அரசாங்கத்தின் நிதி ஒதுக்கீட்டில் பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்களும், பெற்றோருக்கு உலர் உணவுப் பொதிகளும் வழங்கும் நிகழ்ச்சி இன்று (04) கல்முனை அல்-அஸ்ஹர் வித்தியாலயத்தில் பாடசாலை அதிபர் எஸ்.எம்.எஸ். ரிஸானா தலைமையில் நடைபெற்றது.

கல்முனை மாநகர சபையின் முன்னாள் பிரதி முதல்வரும், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் பொருளாளரும், கல்முனை ரஹ்மத் பவுண்டேஷனின் ஸ்தாபகத் தலைவருமான ரஹ்மத் மன்சூர் அழைப்பின் பேரில், இலங்கைக்கான சீனத் தூதுவர் கீ சென்ஹொங் (Qi Zhenhong) பிரதம அதிதியாக கலந்துகொண்டு மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்களையும் பெற்றோருக்கான உலர் உணவுப் பொதிகளையும் வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில், கௌரவ அதிதியாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவரும் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான கலாநிதி எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் கலந்துகொண்டதுடன், கல்முனை வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.எஸ். சஹ்துல் நஜீம் உள்ளிட்ட முக்கியஸ்தர்களும் பங்கேற்றனர்.

“சீன – இலங்கை சகோதரத்துவ பாசம்” எனும் திட்டத்தின் கீழ் இடம்பெற்ற இந்நிகழ்வு, இரு நாடுகளுக்கிடையிலான நட்புறவையும் மனிதாபிமான ஒத்துழைப்பையும் மேலும் வலுப்படுத்தும் வகையில் அமைந்தது.

பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ்வின் கல்வி, சமூகப் பணிகளைப் பாராட்டி, பாடசாலை அதிபரினால் பொன்னாடை போர்த்தி நினைவுச் சின்னம் வழங்கிக் கௌரவிக்கப்பட்டார்.

அரசியல் பிரமுகர்கள், கல்வியாளர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள், சமூக ஆர்வலர்கள், நலன்விரும்பிகள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

கௌசல்யா