தற்காலத்தில் செய்தித் தளங்களிலும் ஏனைய ஊடகப் பரப்பிலும் ‘மற்றும்’ என்ற சொல் அதிகம் பயன்படுத்தப்படுகிறது. தமிழில் அப்படியொரு சொல் கிடையவே கிடையாது என்று தமிழ் அறிஞர்கள் என்னதான் எடுத்துச் சொன்னாலும் யாரும் கேட்பதாக இல்லை.
‘மற்று’ என்ற ஓர் அசைச்சொல் இருப்பினும் அதனுடன் ஓர் உம் சாரியை சேர்ந்து வராது. மற்று என்றால் , மற்றொன்று, வேறொன்று, மற்றையது (Another, Other) போன்ற பொருள்களைத் தரும்.
ஆனால், And என்ற ஆங்கிலச் சொல்லுக்குப் பிரதியீடாக மற்றும் என்று எழுதுவது தற்காலத்தில் ஒரு நோய்போல் வியாபித்திருக்கிறது.
பலர் – குறிப்பாக வானிலை அறிவிப்புகளில் – கொழும்பு, கம்பகா, காலி மற்றும் கண்டி ஆகிய மாவட்டங்களில் என்று எழுதுகிறார்கள். இந்த மற்றும் அதாவது ‘அண்ட்’ என்பதற்குப் பதிலாகத்தான் ஆகிய, போன்ற, முதலான போன்ற சொற்களில் ஒன்றைப் பயன்படுத்துகிறோம்.
மற்றும் என்று எழுதினால், ஆகிய அவசியம் இல்லை. பொதுவாக மற்றும் என்ற சொல்லே அவசியமில்லை. You and Me or I என்பதை நீ மற்றும் நான் என்று சொல்வோமா அல்லது எழுதுவொமா? இல்லையே. நீயும் நானும் என்றே எழுதுவோம்;சொல்வோம். அதுவே சரியானது.
அப்படியென்றால் இதேபோன்று ஏன் மற்றைய இடங்களில் எழுத முடியாது?
இலங்கையில் நல்ல தமிழ் பேசுகிறார்கள்;எழுதுகிறார்கள் என்று இந்தியாவில் மெச்சுகிறார்கள். ஆனால், இங்குள்ள ஊடகவியலாளர்களும் செய்தியாளர்களும்தான் தமிழைக் கொலை செய்கிறார்கள் என்ற குற்றச்சாட்டை நாம் மறுதலித்துவிட முடியாது.
காற்புள்ளி இட்டாலே அஃது உம்மைத் தொகைதான். அதற்கு மேலதிகமாக ஒரு மற்றும் . அவசியமன்று. அநேகமானவர்கள் எண்ணும்மையை அடுத்தும் காற்புள்ளி இடுகிறார்கள்.
இதுவும்- மற்றும், ஆகிய போலத்தான். எண்ணும்மைச் சொற்களை அடுத்து இன்னுமோர் உம்மைத்தொகை (காற்புள்ளி) இடுவதில்லையே! அதுவும், இதுவும்,உதுவும் என்று காற்புள்ளி இட்டு எழுதுவதில்லை. அதுவும் இதுவும் உதுவும் என்றே எழுத வேண்டும்.
ஒருவாறு நாட்கள் அல்ல நாள்கள் என்று கத்திக் கத்திப் பல அறிஞர்கள் வலியுறுத்திச் சொன்னதால், இப்போது ஊடகங்களில் ‘நாள்கள்’ என்பது வழக்கத்திற்கு வந்துகொண்டிருக்கிறது.
ஆகவே, மற்றும் என்ற சொல்லைத் தவிர்த்து அறிவிப்புச் செய்தோ எழுதியோ பாருங்கள் இனிமை புரியும்!
இதயநிலா சுகன்ஜி
