மேலும் 20 காடுகள் பாதுகாக்கப்பட்ட வனங்களாகப் பிரகடனம்

‘வனஸ்பதி’ தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் மேலும் 20 காடுகள் பாதுகாக்கப்பட்ட வனங்களாக வர்த்தமானியில் அறிவிக்கப்பட்டுள்ளன.

இலங்கையின் வன வளத்தை எதிர்கால சந்ததியினருக்காக பாதுகாக்கும் நோக்கில் முன்னெடுக்கப்படும் ‘வனஸ்பதி’ தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் மேலும் 20 காடுகள் பாதுகாக்கப்பட்ட வனங்களாக வர்த்தமானி அறிவித்தல் மூலம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளன. இது தொடர்பான தேசிய நிகழ்ச்சி இன்று (26) நுவரெலியா, சந்ததென்னை வனக் கல்லூரியில் நடைபெற்றது.

சந்ததெனை வனக் கல்லூரியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள அருங்காட்சியகம் சுற்றாடல் அமைச்சர் வைத்தியர் தம்மிக்க படபெந்தியால் உத்தியோகபூர்வமாகத் திறந்து வைக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து பிரதான மண்டபத்தில் மங்கல விளக்கேற்றும் நிகழ்வு இடம்பெற்றது.வனப் பாதுகாப்புத் திணைக்களத்தில் புதிதாக இணைத்துக் கொள்ளப்பட்ட அதிகாரிகளுக்கான நியமனக் கடிதங்களையும் அமைச்சர் வழங்கினார்.

அதன் பின்னர் பாதுகாக்கப்பட்ட வனங்களாக பிரகடனப்படுத்தப்பட்ட 20 காடுகளுக்கான வர்த்தமானி அறிவித்தல்களில் சுற்றாடல் அமைச்சர் வைத்தியர் தம்மிக்க படபெந்தி கையொப்பமிட்டார்.

இந்த நிகழ்வில் பிரதி அமைச்சர் அண்டன் ஜயக்கொடி, வனப் பாதுகாப்பாளர் நாயகம் எஸ்.சி. பாலமகும்புர உள்ளிட்ட அரச அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.

நுவரெலியா, கேகாலை, அம்பாறை, பதுளை, வவுனியா,அனுராதபுரம் ஆகிய மாவட்டங்களில் அமைந்துள்ள 20 காடுகள் பாதுகாக்கப்பட்ட வனங்களாக வர்த்தமானி மூலம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளன.

இந்த 20 காடுகளின் மொத்த பரப்பளவு சுமார் 9,538 ஹெக்டேயர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போதைய அரசாங்கத்தின் சுற்றாடல் அமைச்சும் வனப் பாதுகாப்புத் திணைக்களமும் இணைந்து முன்னெடுத்து வரும் வேலைத்திட்டத்தின் கீழ் இதுவரை 93 காடுகள் பாதுகாக்கப்பட்ட வனங்களாக வர்த்தமானியில் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளன.

இன்று பிரகடனப்படுத்தப்பட்ட காடுகளையும் சேர்த்து, இந்தப் பாதுகாக்கப்பட்ட வனங்களின் மொத்த பரப்பளவு சுமார் 65,000 ஹெக்டேயர்களாகும்.

இலங்கையின் பெறுமதிமிக்க வன வளத்தையும் உயிரியல் பல்வகைமையையும் எதிர்கால சந்ததியினருக்காகப் பாதுகாக்கும் நோக்கில் ‘வனஸ்பதி’ தேசிய வேலைத்திட்டம் 2025 ஆம் ஆண்டு உலக சுற்றாடல் தினத்தன்று ஆரம்பிக்கப்பட்டது.

இந்த வேலைத்திட்டத்தின் கீழ் வெப்பமண்டல ஈர வலய பசுமைமாறா காடுகள், மலைநாட்டு மற்றும் உப மலைநாட்டு காடுகள், வெப்பமண்டல உலர் கலப்பு பசுமைமாறா காடுகள், இடைநிலை வலய அரை பசுமைமாறா காடுகள், கரையோர மற்றும் கண்டல் காடுகள் உள்ளிட்ட பல்வேறு வனச் சூழலியல் தொகுதிகள் பாதுகாக்கப்பட்ட பகுதிகளாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளன.

2025 ஆம் ஆண்டு உலக சுற்றாடல் தினம் முதல் 2026 ஆம் ஆண்டு உலக சுற்றாடல் தினம் வரையிலான ஒரு வருட காலப்பகுதியில் மட்டும் 86 காடுகள் பாதுகாக்கப்பட்ட வனங்களாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளன. இலங்கை வரலாற்றில் ஒரே வருடத்தில் பாதுகாக்கப்பட்ட வனங்களாக அறிவிக்கப்பட்ட அதிகூடிய காடுகளின் எண்ணிக்கை இதுவாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

‘வனஸ்பதி’ என்பது வெறுமனே மரங்களை நடும் வேலைத்திட்டம் அல்ல. விஞ்ஞான ரீதியான ஆய்வுகள் மற்றும் பிரதேச மக்களின் பங்களிப்பை அடிப்படையாகக் கொண்டு, வனச் சூழலியல் தொகுதிகளை நீண்டகால அடிப்படையில் பாதுகாத்து முகாமைத்துவம் செய்வதை இலக்காகக் கொண்ட ஒரு மூலோபாய வேலைத்திட்டமாக இது முன்னெடுக்கப்படுகிறது.

இதற்கிடையில், நேற்று நுவரெலியா சந்ததென்ன வனக் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்வில், வர்த்தமானி மூலம் பாதுகாக்கப்பட்ட வனங்களாக பிரகடனப்படுத்தப்பட்ட 20 காடுகளின் தனித்துவமான அம்சங்கள், அவற்றின் பரப்பளவு உள்ளிட்ட மேலதிக தகவல்களும் வெளியிடப்பட்டன.

ஆர்.எப்.எம். சுஹெல் – நுவரெலியா