மேல் மாகாணத்தில் 104 மெட்ரோ பஸ்கள் இன்று சேவையில் ஈடுபடுகின்றன.
கொழும்பு நகரில் நிலவும் போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதுடன், பயணிகளுக்கு வசதியானதும் பாதுகாப்பானதுமான பொதுப் போக்குவரத்து சேவையை வழங்கும் நோக்கில், மேல் மாகாணத்தின் 7 வழித்தடங்களில் இவை புதிதாக ஈடுபடுத்தப்படுகின்றன.
ஜனாதிபதி தலைமையில் இந்தப் புதிய பஸ் சேவை ஆரம்பிக்கப்படுகிறது.இன்று (29) முதல் சேவையை ஆரம்பிப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக மெட்ரோ பஸ் நிறுவனத்தின் தலைவர் எஸ்.எம்.யூ.பி. திலகரத்ன தெரிவித்துள்ளார்.
பயணிகள் நிர்ணயிக்கப்பட்ட வழித்தடங்கள்,நேர அட்டவணைகளுக்கு ஏற்ப தங்களது இலக்குகளைச் சென்றடையக்கூடிய வகையில் சேவைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.
கொழும்புக்குள் நுழையும் தனியார் வாகனங்களின் எண்ணிக்கையையும், குறிப்பாக ஒரு பயணி மாத்திரம் பயணிக்கும் வாகனங்களைக் குறைப்பதே இந்த சேவையை அறிமுகப்படுத்துவதன் முக்கிய நோக்கங்களில் ஒன்றாகும் என திலகரட்ண குறிப்பிட்டுள்ளார்.
நாளாந்தப் பயணங்களுக்காகப் பொதுப் போக்குவரத்து சேவைகளைப் பயன்படுத்த பொதுமக்களை ஊக்குவிப்பதன் மூலம், கொழும்பு நகரில் நிலவும் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க முடியும் எனவும் மெட்ரோ பஸ் நிறுவனத்தின் தலைவர் திலகரத்ன மேலும் தெரிவித்துள்ளார்.
எஸ்.ஆர்.இரவீந்திரன்
