தேயிலை உற்பத்தியை மீளக் கட்டியெழுப்ப நடவடிக்கை

தேயிலை உற்பத்தியை மீளக் கட்டியெழுப்புவதுடன் மாற்றுப் பயிர்ச்செய்கையும் விரிவுபடுத்தப்படும் என்று பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கிட்ணன் செல்வராஜ் எம்.பி. தெரிவித்தார்.

உள்நாட்டு உற்பத்திகளை ஏற்றுமதிப் பொருட்களாக மாற்றி, அந்நியச் செலாவணியை அதிகரிப்பதன் ஊடாக நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்துவதற்கான ஆரம்பகட்ட நடவடிக்கையாகவே ஏற்றுமதி விவசாயத் தொழில் ஊக்குவிப்பு திருத்தச் சட்டமூலம் முன்வைக்கப்பட்டுள்ளதாக பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கிட்ணன் செல்வராஜ் தெரிவித்துள்ளார்.

ஏற்றுமதி விவசாயத் தொழில் ஊக்குவிப்பு திருத்தச் சட்டமூலத்தின் இரண்டாம் மதிப்பீடு தொடர்பான பாராளுமன்ற விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

நாட்டின் பொருளாதாரத்தை மீளக் கட்டியெழுப்புவதற்கு உள்நாட்டு உற்பத்தியை அதிகரிப்பதும், அவற்றை ஏற்றுமதிச் சந்தைக்கு கொண்டு செல்வதன் மூலம் அமெரிக்க டொலர் வருமானத்தை உயர்த்துவதும் அவசியமானது, 2030ஆம் ஆண்டளவில் வறுமையை ஒழிப்பதை இலக்காகக் கொண்டு அரசாங்கம் பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றது.

உள்நாட்டு உற்பத்தியை அதிகரித்து, ஏற்றுமதி மூலம் கிடைக்கும் அந்நியச் செலாவணி வருமானத்தை 30 சதவீதம் வரை உயர்த்துவதற்கான முன்னெடுப்புகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

இலங்கையின் பாரம்பரிய ஏற்றுமதிப் பொருட்களான தேயிலை, தென்னை மற்றும் இறப்பர் ஆகிய துறைகளில், குறிப்பாக தேயிலை உற்பத்தியில் தொடர்ச்சியான வீழ்ச்சி ஏற்பட்டுள்ளமை குறித்து சுட்டிக்காட்டிய கிட்ணன் செல்வராஜ் எம்.பி., தேயிலை உற்பத்தியை மீண்டும் அதிகரித்து நாட்டுக்கு அந்நியச் செலாவணியை ஈட்டிக்கொடுக்கும் நோக்கில் அரசாங்கம் “Ceylon Tea Village 500” என்ற வேலைத்திட்டத்தை முன்னெடுத்து வருகின்றது.

அத்திட்டத்தின் கீழ் முதற்கட்டமாக 144 சிலோன் டீ தேயிலைக் கிராமங்களை உருவாக்குவதற்கான நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

அத்துடன், நாட்டில் மூடப்பட்டுள்ள தேயிலைத் தொழிற்சாலைகள் தொடர்பிலும் அவர் பாராளுமன்றத்தில் கவனம் செலுத்தினார். 1992ஆம் ஆண்டில் இலங்கையிலிருந்த 449 பெருந்தோட்டங்கள் 22 பன்னாட்டு நிறுவனங்களிடம் ஒப்படைக்கப்பட்டதாகக் குறிப்பிட்ட அவர், தற்போதைய நிலையில் நாட்டில் 203 தேயிலைத் தொழிற்சாலைகள் முற்றாக மூடப்பட்டுள்ளன என்றார்.

கடந்த காலங்களில் பெருந்தோட்டத் துறையை நிர்வகித்த அரசாங்கங்களால் மேற்கொள்ளப்பட்ட கொள்கைகள் மற்றும் நடவடிக்கைகளின் விளைவாக ஏற்பட்ட பிரச்சினைகளுக்கு தீர்வு காண வேண்டிய தேவை தற்போது ஏற்பட்டுள்ள நிலையில், அதே காலகட்டத்தில் ஆட்சியில் இருந்தவர்கள் தற்போதைய அரசாங்கத்திற்கு பல்வேறு ஆலோசனைகளை முன்வைப்பது குறித்து அவர் கேள்வி எழுப்பினார்.

இதேவேளை, தென்னை உற்பத்தியை அதிகரிப்பதற்கும் கிராமப்புற பொருளாதாரத்தை வலுப்படுத்துவதற்கும் அரசாங்கம் நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றது.

இதன் ஒரு பகுதியாக நாட்டில் புதிதாக 250 தென்னைக் கிராமங்களை உருவாக்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன், இந்த ஆண்டிற்குள் மாத்திரம் 75 கிராமங்களை உருவாக்குவதற்கான பணிகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

1928 மற்றும் 1929ஆம் ஆண்டுகளில் 29ஆம் இலக்க சட்டத்தின் கீழ் நிறுவப்பட்ட தென்னை ஆராய்ச்சி நிலையம் 97 ஆண்டுகளை நிறைவு செய்துள்ள நிலையில், கடந்த காலங்களில் உரிய முறையில் பராமரிக்கப்பட்டு அபிவிருத்தி செய்யப்படாததன் காரணமாக நாட்டில் தேங்காய் உற்பத்தி தொடர்பில் கடுமையான சவால்கள் உருவாகியுள்ளது. இதன் தாக்கமாக உள்நாட்டு தேவையை பூர்த்தி செய்வதிலும், தேங்காய் சார்ந்த உப உணவுப் பொருட்களை ஏற்றுமதி செய்வதிலும் சிக்கல்கள் ஏற்பட்டுள்ளது.

தற்போது முன்வைக்கப்பட்டுள்ள சட்டமூலம் நாட்டிலுள்ள சிறு மற்றும் நடுத்தர அளவிலான உற்பத்தியாளர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கும், அவர்களின் உற்பத்திகளை ஏற்றுமதிச் சந்தையுடன் இணைப்பதற்கும் முக்கிய வாய்ப்பை ஏற்படுத்தும்.

பெருந்தோட்டத் துறையை பொறுப்பேற்ற பல அமைச்சர்கள் மற்றும் பிரதி அமைச்சர்கள் கடந்த காலங்களில் பதவி வகித்த போதிலும், பெருந்தோட்டப் பகுதிகளில் மாற்றுப் பயிர்ச்செய்கையை ஊக்குவிப்பதற்கோ அல்லது சிறு ஏற்றுமதிப் பயிர்களை அபிவிருத்தி செய்வதற்கோ போதுமான திட்டங்கள் முன்னெடுக்கவில்லை.

இதன் காரணமாக பெருந்தோட்டத் தொழிலாளர்கள் நீண்டகாலமாக தேயிலைத் துறையை மாத்திரமே நம்பியிருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. அவர்களின் பொருளாதார நிலையை மேம்படுத்துவதற்கு வருமான வாய்ப்புகளை பல்வகைப்படுத்துவது அவசியம்.

மலையகத்தில் தற்போது காடுகளாக மாறியுள்ள பயன்படுத்தப்படாத மற்றும் தரிசு நிலங்களை அடையாளம் கண்டு, அவற்றில் சிறு ஏற்றுமதிப் பயிர்களை உற்பத்தி செய்வதற்கான திட்டங்களை அரசாங்கம் எதிர்காலத்தில் முன்னெடுக்கவுள்ளது.

மாற்றுப் பயிர்ச்செய்கை மற்றும் சிறு ஏற்றுமதிப் பயிர் அபிவிருத்தி மூலம் மலையக மற்றும் கிராமப்புற மக்களின் வருமானத்தை அதிகரித்து, வறுமையை ஒழிப்பதுடன், அவர்களுக்கு நிலையானதும் வளமானதுமான எதிர்காலத்தை உருவாக்குவதே தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் நோக்கம் எனவும் பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கிட்ணன் செல்வராஜ் மேலும் தெரிவித்துள்ளார்.