மின் கட்டணச் சலுகை குறைநிரப்பு பிரேரணை நிறைவேற்றம்

மின் கட்டணச் சலுகைக்கான குறைநிரப்பு பிரேரணை பாராளுமன்றில் நிறைவேற்றம் மின் கட்டணங்கள் தொடர்பாக பொதுமக்களுக்குச் சலுகைகளை வழங்குவதற்காக 17,213 மில்லியன் ரூபாய் நிதிச் சலுகையை வழங்குவதற்கான குறைநிரப்பு பிரேரணை இன்று (23) பாராளுமன்றத்தில் எவ்வித திருத்தங்களுமின்றி நிறைவேற்றப்பட்டது.

2026 ஆம் ஆண்டிற்காக நிரல் அமைச்சுக்களுக்கு (Line Ministries) ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள போதிலும், ஆண்டின் இறுதி வரை பயன்படுத்தப்பட மாட்டாது என அடையாளம் காணப்பட்டுள்ள நிதியொதுக்கீடுகள் மூலம் இந்த குறைநிரப்பு பிரேரணைக்கு தேவையான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

அதன்படி, இந்த நிதி ஒதுக்கீடானது, 2025 ஆம் ஆண்டின் 23 ஆம் இலக்க ஒதுக்கீட்டுச் சட்டத்தின் மூலம் அங்கீகரிக்கப்பட்ட மொத்தச் செலவின எல்லைக்கோ அல்லது அரசாங்கத்தின் அதிகபட்சக் கடன் பெறும் எல்லைக்கோ எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்தாத வகையில் மேற்கொள்ளப்படுகிறது.

இந்த குறைநிரப்பு பிரேரணை நேற்று (22) அரசாங்க நிதிப் பற்றிய குழுவில் விவாதிக்கப்பட்டதன் பின்னர், அதற்குரிய குழுவின் அனுமதி வழங்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.