விமானப்படை ஓடுபாதைகளை அழிக்கும் நவீன ஆயுதங்கள்!

எதிரிகளின் விமானப்படை ஓடுபாதைகளை அழிக்கும் நவீன ஆயுதங்கள் ரூ.811 கோடிக்கு கொள்முதல்

எதிரிகளின் விமானப்படை ஓடுபாதைகளை செயற்கைக்கோள் வழிகாட்டுதலுடன் தாக்கி அழிக்கும் 160 நவீன ஆயுதங்களை (சாட்-எஸ்ஏஏடபிள்யு) ரூ.810.79 கோடிக்கு கொள்முதல் செய்வது தொடா்பாக பாரத் டைனாமிக்ஸ் லிமிடெட் (பிடிஎல்) நிறுவனத்துடன் பாதுகாப்பு அமைச்சகம் ஒப்பந்தம் செய்துள்ளது.

இதுகுறித்து பாதுகாப்பு அமைச்சகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டதாவது:

தரையில் உள்ள விமான ஓடுபாதைகள் உள்ளிட்ட கட்டமைப்புகள், போா் விமானங்கள் அல்லது ஹெலிகாப்டா்கள் மூலம் அருகில் சென்றே குண்டுவீசி தாக்கி அழிக்கப்படுகிறது.

இதற்கு பதிலாக போா் விமானங்கள், ஹெலிகாப்டா்களில் நீண்ட தொலைவில் இருந்தபடி தரையில் உள்ள விமானப்படை உள்கட்டமைப்பு வசதிகளை தாக்கி அழிக்க பயன்படுத்தப்படும் சாட்-எஸ்ஏஏடபிள்யு கிளைட் குண்டு ஆயுதத்தை வாங்க பாதுகாப்பு அமைச்சகம் முடிவு செய்துள்ளது.

இந்த ஆயுதத்தை ஜாக்குவாா், ஹாக், சுகோய் 30 போன்ற போா் விமானங்கள், ஹெலிகாப்டா்களில் இருந்து ஏவ முடியும். போா் விமானங்களில் விமானி இருந்தபடியே சுமாா் 100 கிலோ மீட்டா் தொலைவில் தரையில் உள்ள விமான ஓடுபாதை உள்ளிட்ட இலக்கை குறிவைத்து தாக்க முடியும்.

விமானங்களில் இருந்து செலுத்தப்பட்டதும், அது செயற்கைக்கோள் வழிகாட்டுதலுடன் துல்லியமாக இலக்கை நோக்கி சென்று தாக்கி அழிக்கும் வல்லமை கொண்டது.

இந்த ஆயுதங்களையும், அதனுடன் இந்திய விமானப்படைக்கு தேவைப்படும் மேலும் சில ஆயுதங்களையும் பாதுகாப்பு அமைச்சகம் வாங்குகிறது. இதற்காக ரூ.810.79 கோடி மதிப்பிலான ஒப்பந்தத்தை பிடிஎல் நிறுவனத்துடன் பாதுகாப்பு அமைச்சகம் புதன்கிழமை மேற்கொண்டது.

தில்லியில் பாதுகாப்பு அமைச்சக செயலாளா் ராஜேஷ் குமாா் சிங் முன்னிலையில் ஒப்பந்தம் கையொப்பமானது.

இந்த ஆயுதங்கள் 2027-28, 2028-29ஆம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்துக்குள் விமானப்படையிடம் ஒப்படைக்கப்படும் என கூறப்படுகிறது. இந்த ஆயுதங்கள் இந்திய விமானப்படையில் சோ்க்கப்படுவதன் மூலம் அதன் வலிமை மேலும் அதிகரிக்கும்.

சாட்-எஸ்ஏஏடபிள்யு ஆயுதமானது, உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்டது. அதை உருவாக்கியது டிஆா்டிஓ அமைப்பாகும். அதில் இருக்கும் உபகரணங்களும் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டதுதான்.