தமிழ், முஸ்லிம் சமூகம் இனவாத மறை கரங்களுக்கு இரையாகக்கூடாது!
நாட்டில் அண்மைக்காலமாக ஓர் இனம்புரியாத விதத்தில் இனவாதம் தலைவிரித்தாடுகிறது. மிக நீண்டகாலத்திற்குப் பின்னர், தமிழ் – சிங்கள இனவாதம் சமூக வலைத்தளங்களில் நிரம்பி வழிந்தது. அது தணிந்திருந்தாலும் இன்னும் முற்றாகத் தோல்வியடைந்துவிடவில்லை.
அதற்குப் பின்னர் வேல்சாமி என்கின்ற ஒரு நாய் செய்த வேலையால், தமிழ், முஸ்லிம் மக்கள் மத்தியில் முரண்பாடுகள் எட்டிப்பார்த்தன.சில உஷார் மடையர்களின் வலைத்தள பதிவுகளால், இரு தரப்பினரும் அருவருக்கக்கூடிய ஒரு நிலை ஏற்பட்டது.
இப்போது மீண்டும் தமிழ், முஸ்லிம் மக்கள் மத்தியில் ஓர் அதிருப்தியைத் தோற்றுவிப்பதற்கான ஒரு முயற்சி அரங்கேறிக்கொண்டிருக்கிறது. நடப்புகளைப் பார்த்தால் நாட்டில் பிரச்சினையை உருவாக்கிக் குளிர்காய முனையும் சில இனவாத மறை கரங்கள் திட்டமிட்ட நிகழ்ச்சி நிரலை செயற்படுத்துவதாகத்தான் தெரிகிறது.
வடக்கில் சிலை வைக்க முயன்று குழப்பம் ஏற்படுத்த முயன்றார்கள். அண்மையில் இராகலைப் பகுதியில் சிலை வைப்பதற்காக முன்னெடுக்கப்பட்ட முயற்சியும்கூடத் திட்டமிட்ட செயலாகத்தான் இருந்திருக்கின்றது.
எப்படியாவது எந்தத் தரப்புடனாவது ஒரு முறுகலைத் தோற்றுவித்துவிட வேண்டும் என்பதுதான் அந்த மறை கரங்களின் எண்ணம். இதனைத் தமிழ், முஸ்லிம் சமூகங்கள் புரிந்துகொண்டு செயற்பட வேண்டியது காலத்தின் கட்டாயமாகும்.
கல்முனை வடக்கு மருத்துவமனை விவகாரம்கூடத் திட்டமிட்ட நிகழ்ச்சி நிரலாகத்தான் இருக்க வேண்டும். தமிழ், சிங்கள முரண்பாட்டுக்கான முயற்சி சற்றே வீழ்ச்சியடைந்ததும்; இப்போது தமிழ், முஸ்லிம் மக்கள் மத்திக்குள் நுழைந்திருக்கிறார்கள்.
என்னதான் பிட்டும் தேங்காய்ப்பூவும் போன்று இருக்கின்றோம் என்று சில அரசியல்வாதிகள் முழங்கினாலும், கிழக்கில் வாழும் மக்களின் மனசாட்சியே உண்மைக்கான ஒரே சாட்சி!
அரசியல்வாதிகளால் தூபமிடப்பட்ட இனவாதத்தை முற்றாக அழிக்க இன்னமும் முடியாமல்தானே இருக்கிறது.கல்முனை மருத்துவமனை விவகாரத்தைப் பார்க்கும்போது அங்குத் தமிழர்களுக்கும் முஸ்லிம்களுக்குமான உறவு ஆரோக்கியமாக இல்லை என்பதைத்தானே காட்டுகிறது.
இந்தச் சந்தர்ப்பத்தில் இரு தரப்புக்குமிடையில் சுமுக நிலையைத் தோற்றுவிப்பதற்குப் பதிலாக, இதுவரை காலம் தங்களை நடுநிலைவாதிகளாகக் காண்பித்து வந்தவர்கள்கூடத் தங்களின் சுயரூபத்தை வெளிப்படுத்தி வன்மத்தைக் கக்கி வருகிறார்கள்.
தமிழர்களோ முஸ்லிம்களோ, சாதாரண மக்கள் எந்தச் சிக்கலுக்கும் போகாமல், எந்தப் பொல்லாப்பும் இல்லாமல்தான் இருக்கிறார்கள். ஆனால், இரண்டு சமூத்திலும் உள்ள மெத்தப் படித்த மேதாவிகளும் ஊடகவியலாளர்கள் என்று சொல்லிக்கொள்கின்ற சில செய்தியாளர்களும்தான் சமூக ஊடகங்களில் வாள்வீச்சும் வாய்வீச்சும் செய்து வருகிறார்கள்.
இனவாதம் பேசிய அரசியல்வாதிகள்கூடத் தற்போது அடங்கியிருக்கும்போது இந்தச் செய்தியாளர்கள், அவர்களுக்கும் சேர்த்து இனவாதம் பேசுகிறார்கள்.
ஊடகவியலாளர்கள் எதனையும் கண்டும் காணாமல் இருக்கவோ ஒரு பக்கம் சார்ந்துபோகவோ ஒரு தனிப்பட்ட குழுவுக்கோ கட்சிக்கோ வாதிடக் கூடாது. (Journalists Cannot Endorse or Condone Anything) அவர்கள் மக்களின் பக்கம் மட்டுமே நிற்க வேண்டும்.
ஒரு விடயம் பிழையெனத் தெரிந்தும் பேசாமல் இருந்தால், அந்தத் தவற்றை அனுமதிப்பதாகவும் தொடர்ந்து நடக்க இடமளிப்பதாகவும் அமைந்துவிடும்.
அதனால்தான்,ஒரு பொறுப்புள்ள ஊடகவியலாளன் என்ற வகையில் இதனை எழுதுகிறேன். நடுநிலையாளர்கள் என்போர் நமக்கு எதற்கு வம்பு என்றிருந்தால், அது நம் மீதான மக்களின் நம்பிக்கை அழிவதற்கு வழிவகுக்கும்.
இலங்கையில் ஊடகவியலாளர்கள் இனமான உணர்வுடன் செயற்படுகிறார்கள் என்பதை மறுக்க முடியாது. அந்தளவுக்கு மேம்பட்ட ஒரு சமூக மாற்றம் இன்னும் ஏற்படவில்லை. அநேகர் சமூக ஊடகவியலை (Community Journalism) சார்ந்தே செயற்படுகிறார்கள்.
ஒரு சிலர் சொல்லும் அறிவுரைக்கமைய, சட்டத்தின்படி போராடலாம் என்கிறார்கள். இந்த நாட்டின் அரசியலமைப்பு சிறுபான்மையினருக்குப் பாதுகாப்பானது என்று ஆரம்பத்தில் நம் அரசியல்வாதிகள் உளறினார்கள்தான், என்றாலும், இதில் நமக்கு முழுமையான பாதுகாப்பு இருக்கின்றதா? ஒரு கையால் கொடுத்து மறு கையால் பறிப்பதாகத்தானே இருக்கிறது. அதற்காக நடத்திய இத்தனை வருடகால அரசியலும் தோல்வி. எல்லாம் திரு.சம்பந்தன் ஐயாவோடும் மாவை ஐயாவோடும் முடிந்துவிட்டதாகவே எண்ணுகிறார்கள். இனித் தட்டத்தில் வைத்து யாரும் எந்த உரிமையையும் தந்துவிடப்போவதில்லை. இஃது எல்லாச் சிறுபான்மையினத்துக்கும் பொருந்தும். கேட்டுப் பெறும் திராணியுள்ள; நமக்காகக் குரல் கொடுக்கத் தலைவர்களும் இல்லை. இந்த உணர்வை மாற்றுவதற்கு யாரும் முயற்சிக்கவுமில்லை. சிறுபான்மைச் சமூகங்களின் பிளவும் விரிசலும் பேரினவாதத்திற்குப் பெருவெற்றியாகவே அமையும்!
சுகாதார ஊழியர்களின் ஆடை விவகாரத்தை இந்தளவுக்குப் பூதாகரமாக்க வேண்டிய அவசியமே இல்லை. சமூக ஊடகப் பதிவுகளே இதில் எண்ணெய் ஊற்றுகின்றன.
எவர் எதைச் சொன்னாலும், அரசாங்கம் எடுத்திருக்கும் தற்காலிக நடவடிக்கையும் (இடமாற்றம்) மேலும் வன்மத்தையும் குரோதத்தையும் ஏற்படுத்தும் விதத்தில் அமைந்திருக்கிறது என்றே சொல்ல வேண்டும்.
என்னைப் பொறுத்தவரை மருத்துவமனையும் அரசும் இணைந்து இதற்கொரு நல்ல தீர்வைப் பெற்றுக்கொடுக்க முடியும். அதற்கு நம் இரு தரப்புப் போராளிகள் ‘உஷார் மடைமை’போக்கினைக் கைவிட்டுப் பொறுத்திருத்தல் வேண்டும்.
இதற்காகத் தற்போது மௌனம் காக்கும் பண்பாளர்கள் குரல்கொடுக்க வேண்டும். இந்த நெருக்கடியான நிலவரத்தில் குளிர்காய நினைக்கும் மறை கரத்தைத் தோற்கடிக்க வேண்டுமானால், சிறுபான்மைச் சமூகங்கள் வேற்றுமையில் ஒன்றுபட வேண்டியது அவசியமாகும்!
தமிழ், முஸ்லிம் இனங்கள் ஒன்றுபட்டும் பெரும்பான்மை இனத்தவருடன் இணக்கப்பாட்டுடனும் வாழ்வதே ஆரோக்கியமான இலங்கையையும் இலங்கையர்களையும் உருவாக்கும்!
விசு கருணாநிதி
