நல்லதண்ணி மோகினி அருவியில் கார் வீழ்ந்து விபத்து

வவுனியாவிலும் கிளிநொச்சியிலுமிருந்து சிவனொளிபாதம் செல்ல வந்தவர்களின் கார், நல்லதண்ணி மோகினி அருவியில் வீழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

இவர்கள் நேற்றிரவு (19) 11 மணியளவில் நல்லதண்ணி பொலிசுக்குச் சென்று தாம் சிவனொளிபாத மலைக்குச் செல்ல வேண்டும் என்று கூறியுள்ளனர்.

நிலவும் சீரற்ற காலநிலைக்கு மத்தியில் தற்போது வேண்டாம்,நாளை (இன்று 20)காலை செல்லுங்கள் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர். அதன் பின்னர் தங்குமிடம் தேடிச்சென்றபோதே அவர்கள் பயணித்த கார் நேற்றிரவு 12 மணியளவில் வழுக்கிச் சென்று மோகினி அருவியில் வீழ்ந்துள்ளது.

விபத்தின்போது காரில் ஆண்கள் மூவரும் பெண்கள் இருவரும் இருந்துள்ளனர். எனினும். எவருக்கும் காயங்கள் ஏற்படவில்லையென்னு நல்லதண்ணி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரதம பொலிஸ் பரிசோதகர் என்.டி. நிரோஷன் தெரிவித்துள்ளார்.

இதே அருவியில் கடந்த மாதம் 22 ஆம் திகதி காலை 7.30 அளவில் ஓட்டோ ஒன்று வீழ்ந்து விபத்துக்குள்ளானதில், ஆண்கள் இருவரும் மாணவி ஒருவரும் உயிரிழந்தனர். (மலைக்குருவி)