தெல்தெனியாவில் சடலமாக கிடந்தவர் வெலிகமை மருத்துவர்!

கண்டி தெல்தெனியா பகுதியில் காரில் சடலமாக மீட்கப்பட்டவர் வெலிகமையைச் சேர்ந்த ஒரு மருத்துவர் என்று அறியவந்துள்ளது.அவர் காதலனால் படுகொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

கண்டி, தெல்தெனியா வைத்தியசாலைக்கு அருகில் நிறுத்தப்பட்டிருந்த கார் ஒன்றினுள் சடலமாகக் கண்டெடுக்கப்பட்ட பெண், தனது காதலனுடன் நுவரெலியாவில் உள்ள சுற்றுலா ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்தபோது படுகொலை செய்யப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

நேற்று 17 ஆம் திகதி தெல்தெனியாவில் பெண்ணின் சடலம் மீட்கப்பட்டது. அவர் முந்தைய நாள் (16) வரை நுவரெலியாவில் தனது காதலனுடன் தங்கியிருந்தமை தொடர்பான தகவலின் அடிப்படையில் நுவரெலியா பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

உயிரிழந்தவர் வெலிகமை பிரதேசத்தைச் சேர்ந்த அநுராதபுரம் வைத்தியசாலையின் பௌதிக சிகிச்சை நிபுணரான பி. ஆர். ஷியாம தர்ஷனி (33) எனவும், அவரது காதலன் கண்ணொருவை பிரதேசத்தைச் சேர்ந்த டி. எம். எஸ். தினெத் திசாநாயக்கா (35) எனவும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இவர்கள் இருவரும் கடந்த ஜூன் 03 ஆம் திகதி முதல் நுவரெலியாவிலுள்ள தனியார் ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்ததாகப் பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

இவர்களுக்கு இடையே ஏற்பட்ட வாய்த்தர்க்கத்தைத் தொடர்ந்து, காதலன் அந்தப் பெண்ணைக் கொலை செய்து, சடலத்தை ஹோட்டலில் இருந்து காரில் ஏற்றிச் சென்று தெல்தெனியா வைத்தியசாலைக்கு அருகில் விட்டுச் சென்றிருக்கலாம் எனப் பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

அந்த ஹோட்டலில் இருந்த பாதுகாப்பு கமெராக்களில் (CCTV), உயிரிழந்த பெண்ணின் முகத்தை மூடி, காதலன் அவரைத் தூக்கிக்கொண்டு செல்லும் காட்சிகள் பதிவாகியுள்ளன. இந்தத் தரவுகளின் அடிப்படையில் நுவரெலியா பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

உயிரிழந்தவர் 33 வயதுடைய வெலிகமை பிரதேசத்தைச் சேர்ந்தவர் ஆவார். நீதவான் பரிசோதனைக்கு பின்னர், சடலம் பிரேத பரிசோதனைக்காக தெல்தெனியா வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

இது திட்டமிட்ட படுகொலையா அல்லது வேறு ஏதேனும் காரணத்தினால் ஏற்பட்ட மரணமா என்பது குறித்து நுவரெலியா பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கெளசல்யா