உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு முழுமையான நீதி கோரி மட்டக்களப்பில் மாபெரும் கவனவீர்ப்பு ஆர்ப்பாட்டம்!

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்களினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இதுவரை முழுமையான நீதி கிடைக்கவில்லை என்பதைச் சுட்டிக்காட்டியும், இத்தாக்குதல்களின் பின்னணியில் உள்ள உண்மையான சூத்திரதாரிகளை தற்போதைய அரசாங்கம் எவ்வித தலையீடுகளுமின்றி சட்டத்தின் முன் நிறுத்த வலியுறுத்தியும் இன்று (18) காலை மட்டக்களப்பில் மாபெரும் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

கிழக்கு சமூக அபிவிருத்தி மையத்தின் (ESDO) ஏற்பாட்டில், மட்டக்களப்பு காந்தி பூங்காவிற்கு முன்பாக நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் பாதிக்கப்பட்ட சமூகங்கள், சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகள் பெருந்திரளாகக் கலந்துகொண்டனர்.

கடந்த காலங்களில் அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்காக அப்பாவிப் பொதுமக்கள் கொன்று குவிக்கப்பட்ட சம்பவங்களின் பின்னணியில் உள்ள எதார்த்தங்களும், உண்மைகளும் தற்போது வெளிவரத் தொடங்கியுள்ளதாக ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள் குறிப்பிட்டனர்.
மேலும், தற்போதைய அரசாங்கம் முன்னெடுத்து வரும் விசாரணைப் பொறிமுறையானது சுதந்திரமானதாகவும், உண்மையான நீதியை நோக்கியதாகவும் அமையும் என பாதிக்கப்பட்ட மக்கள் பெரிதும் நம்புவதுடன், தற்போதைய நீதித்துறை சார்ந்த முயற்சிகளுக்கு சிவில் சமூகமாகவும், பாதிக்கப்பட்ட தரப்பாகவும் முழுமையான ஒத்துழைப்பை வழங்கத் தயாராக இருப்பதாகவும் பகிரங்கமாகத் தெரிவித்தனர்.

இவ் ஆர்ப்பாட்டத்தின் போது பாதிக்கப்பட்ட தரப்பினரால் அரசாங்கத்திற்கும், பாதுகாப்புத் துறையினருக்கும் பின்வரும் முக்கிய கோரிக்கைகள் அடங்கிய பிரகடனம் முன்வைக்கப்பட்டது:
தற்போது வெளிவந்து கொண்டிருக்கும் ஆதாரங்களின் அடிப்படையில், குற்றச்சாட்டுகளுடன் தொடர்புடைய சில அரசியல்வாதிகளும், பாதுகாப்புத்துறை அதிகாரிகளும் தங்களைப் பாதுகாத்துக் கொள்வதற்காக இந்த விசாரணைகளை மூடிமறைக்க முயல்கின்றனர்.

முன்னாள் அரசியல்வாதிகளும், தீவிரப்போக்குடைய சில மதத் தலைவர்களும் விசாரணையைத் திசைதிருப்பவும், மக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தவும் முயல்வதை வன்மையாகக் கண்டிக்கின்றோம். எவ்வித அரசியல், மதப் பின்னணி சார்ந்த அழுத்தங்களும் இன்றி இவ்விசாரணை முற்றிலும் சுதந்திரமாக முன்னெடுக்கப்பட வேண்டும்.
இந்தச் சம்பவங்கள் குறித்த உண்மைகளை வெளியிடுவதைத் தடுக்க அல்லது சான்றுகளை அழிக்கும் நோக்கில் சுரேஷ் சாலி மற்றும் பிள்ளையான் போன்றவர்களுக்கு ஆபத்துகள் ஏற்பட வாய்ப்புள்ளதால், அவர்களின் பாதுகாப்பை அரசு உடனடியாக உறுதி செய்ய வேண்டும்.

தாக்குதலினால் காயமடைந்து, விசேட தேவைக்குள்ளாக்கப்பட்டு, உளவியல் ரீதியாகப் பாதிக்கப்பட்டுள்ள கிறிஸ்தவ சமூக மக்களின் வாழ்வாதாரம், பொருளாதாரம் மற்றும் சமூகச் செயற்பாடுகளை மீட்டெடுக்க அரசாங்கம் விரைந்து உதவிகளை வழங்க வேண்டும்
பயங்கரவாதச் செயல்களோடு எவ்வித தொடர்புமில்லாத, அப்பாவி முஸ்லிம் இளைஞர்கள் பலர் சந்தேகத்தின் பேரில் 7-8 வருடங்களாக இன்னமும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இன்றும் தொடரும் இத்தகைய தன்னிச்சையான விசாரணை அச்சுறுத்தல்கள் உடனடியாக நிறுத்தப்பட்டு, உண்மையான குற்றவாளிகள் யாராக இருந்தாலும் பாரபட்சமின்றி சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும்.
பாதிக்கப்பட்ட ஒட்டுமொத்த சமூகத்திற்கும் உண்மையான நீதி கிடைக்கும் வரை சிவில் சமூக அமைப்புக்கள் பொதுமக்களுடன் ஒன்றிணைந்து தொடர்ச்சியாக குரல் கொடுக்கும் என இதன்போது வலியுறுத்தப்பட்டது.
எஸ். வரதராஜன் – மட்டக்களப்பு





