சபரகமுவை மருத்துவப் பீட வீதி விரைவில் அபிவிருத்தி

இரத்தினபுரி புதிய நகரில் அமைந்துள்ள சபரகமுவை பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடத்தையும் இரத்தினபுரி போதனா வைத்தியசாலை வளாகத்தில் உள்ள பேராசிரியர் கட்டடத்தொகுதியினையும் இணைக்கும் வீதி கூடிய விரைவில் அபிவிருத்தி செய்யப்படவுள்ளதாக சபரகமுவை மாகாண ஆளுநர் சம்பா ஜானகி ராஜரத்தின தெரிவித்துள்ளார்.

அண்மையில் இரத்தினபுரி ஆளுநர் அலுவலகக் கேட்போர் கூடத்தில் நடைபெற்ற முன்னேற்ற மதிப்பீட்டுக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

தற்போது கிராம மக்கள் பயன்படுத்தி வரும் குறுகிய வீதியைச் சுமார் 15 அடி அகலத்தில் செப்பனிட்டு (கார்பெட் வீதியாக) அபிவிருத்தி செய்ய சபரகமுவை மாகாண சபை நடவடிக்கை எடுத்து வருகிறது.

இதற்கான நில அளவீட்டுப் பணிகள் ஏற்கனவே நிறைவடைந்துள்ளன. திட்டத்திற்காக ரூபாய் 584 மில்லியன் செலவிடப்படவுள்ளது.

சபரகமுவை மருத்துவப் பீடம் முக்கியமாக சவுதி அரேபிய அரசின் நிதி உதவியுடன் நிர்மாணிக்கப்பட்டு வருகிறது. தற்போது கட்டுமானப் பணிகள் இறுதிக்கட்டத்தில் உள்ளன.

இவ்வருடம் ஜூலை மாதத்தின் முதல் வாரத்தில் மருத்துவப் பீடத்தை மாணவர்களின் பயன்பாட்டிற்காகக் கையளிக்கும் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது அங்கு சுமார் 1,000 மாணவர்கள் கல்வி கற்று வருகின்றனர். அவர்களில் சுமார் 500 மருத்துவ மாணவர்கள், மருத்துவ பீட வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள விடுதிகளில் தங்கி வருகின்றனர்.

இந்த நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர் ஜனக சேனாரத்தின, முன்னாள் மாகாண சபை உறுப்பினரும் ஆளுநரின் மக்கள் தொடர்பு அதிகாரியுமான புஷ்பகுமார திசாநாயக்கா உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

எஸ். ஆர். இரவீந்திரன்