தித்துவா புயலால் பாதிக்கப்பட்ட இந்து ஆலயங்களின் புனரமைப்பு, சுத்திகரிப்பு நடவடிக்கைகளுக்கான நிதியுதவிக் காசோலைகள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று (09) பிற்பகல் மட்டக்களப்பு பழைய மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.
மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் பிரதேச அபிவிருத்திக் குழுத் தலைவருமான கந்தசாமி பிரபு தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எஸ். அருள்ராஜ் கலந்துகொண்டார்.
புத்தசாசனம், மதம், கலாசார அலுவல்கள் அமைச்சின் ஊடாக இந்து சமய, கலாசார அலுவல்கள் திணைக்களத்தினால் தித்துவா புயலால் பாதிக்கப்பட்ட இந்து மத வழிபாட்டுத் தலங்களை சுத்தம் செய்வதற்கும் ஆலயங்களைப் புனரமைப்பதற்குமான இரண்டாம் கட்ட நிதியுதவி இந்நிகழ்வில் வழங்கப்பட்டது.
அதன்படி, மத வழிபாட்டுத் தலங்களை சுத்தம் செய்வதற்காக 15 ஆலயங்களுக்குத் தலா 25,000 ரூபாய் வழங்கப்பட்டது. 13 ஆலயங்களின் புனரமைப்புப் பணிகளுக்காக தலா 250,000 ரூபாய் நிதியும் மேலும் ஓர் ஆலயத்திற்காக 350,000 ரூபாய் நிதியும் வழங்கப்பட்டது.
இந்நிகழ்வில் உதவி மாவட்ட செயலாளர் ஜி.பிரணவன், மாநகர சபை உறுப்பினர்கள், மாவட்ட இந்து கலாசார உத்தியோகத்தர் கே. குணநாயகம், அரச அதிகாரிகள், ஆலய நிர்வாகிகள் உட்படப் பலர் கலந்துகொண்டனர்.
எஸ். வரதராஜன்






