இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கிலிருந்து விடுதலையான ஏ. ஜி. பேரறிவாளன், இன்று (27) தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி சட்டத்தரணிகள் சங்கத்தில் சட்டத்தரணியாகப் பதிவு செய்துகொண்டார்.
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று சிறையில் இருந்த காலத்தில், பேரறிவாளன் இளமாணி, முதுமாணி உள்ளிட்ட பட்டப்படிப்புகளை முடித்தார்.
உயர்நீதிமன்றத்தால் முன்கூட்டியே விடுதலை செய்யப்பட்ட பின்னர், அவர் பெங்களூருவில் உள்ள சட்டக் கல்லூரியில் சேர்ந்து மூன்று ஆண்டு சட்டப்படிப்பை நிறைவு செய்தார்.
இந்தநிலையில், சென்னை உயர்நீதிமன்ற கூட்டரங்கில் இன்று நடைபெற்ற சட்டத்தரணிகள் பதிவு செய்யும் நிகழ்வில்;, பேரறிவாளன் உட்பட மொத்தம் 1,248 பேர் சட்டத்தரணிகளாக பதிவு செய்துகொண்டனர்.
சட்டத்தரணிகள் சங்க உறுப்பினரும், புதிய சட்டத்தரணிகள் பதிவுக் குழுவின் தலைவருமான கே. பாலு உறுதிமொழியை வாசித்தார்.
பேரறிவாளன் உள்ளிட்டோர் அதனை ஏற்று உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
இந்த நிகழ்வில் சென்னை மேல் நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ. தர்மாதிகாரி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
