வீட்டு வேலைகளைக் கணவன், மனைவி இருவரும் பகிர்ந்துகொள்ள வேண்டும் என்றும் இப்போது காலம் மாறிவிட்டது என்றும் இந்திய உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
“நீங்கள் ஒரு பணிப்பெண்ணைத் திருமணம் செய்யவில்லை! ஒரு வாழ்க்கைத் துணையைத் திருமணம் செய்திருக்கிறீர்கள்!: என்று உச்ச நீதிமன்ற நீதியரசர்களான விக்கிரம் நாத், சந்தீப் மேத்தா ஆகியோர் ஓர் ஆடவருக்குக் கருத்து சொல்லியிருக்கிறார்கள்.
“சமைத்தல், துணி கழுவுதல் முதலான வேலைகளுக்கு நீங்களும் பங்களிப்பு செய்ய வேண்டும். இன்றைய காலம் வித்தியாசமானது என்று விவாகரத்து வழக்கொன்றை விசாரிப்பதற்காகக் கணவனையும் மனைவியையும் நேரில் ஆஜராகுமாறு உத்தரவிட்ட நீதியரசர்கள் தெரிவித்ததாக டைம்ஸ் ஒப் இந்தியா செய்தி வெளியிட்டுள்ளது.
கர்நாடக மேல் நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து அந்த நபர் தாக்கல் செய்த மனுவை விசாரித்தபோது உச்ச நீதிமன்ற நிதியரசர்கள் இந்தக் கருத்தைத் தெரிவித்தனர்.
கொடுமையின் அடிப்படையில் அந்த நபருக்கு விவாகரத்து வழங்கிய விசாரணை நீதிமன்ற உத்தரவை கர்நாடக மேல் நீதிமன்றம் இரத்து செய்தது. அதனை எதிர்த்தே இவர் உச்ச நீதிமன்றத்தில் மேன்முறையீடு செய்திருக்கிறார்.
அவரது மனு நேற்று (20) உச்ச நீதிமன்றத்திற்கு வந்தபோது அவர் சார்பாக ஆஜரான சட்டத்தரணி, இந்த இருவரும் 2017 இல் திருமணம் செய்தார்கள். ஓர் ஆண் குழந்தையும் உள்ளது. சமரசம் செய்ய எடுத்த முயற்சிகள் பலனளிக்கவில்லை. ஆதலால், 2019 முதல் பிரிந்து வாழ்கிறார்கள் என்று நீதியரசர்களுக்கு விபரித்தார்.
இந்தப் பெண் சரியாகச் சமைப்பதில்லை. முறையாக நடந்துகொள்கிறார் இல்லை. அதனால், விவாகரத்து கோருகிறார் என்று சுட்டிக்காட்டினார்.
அப்போது கருத்து தெரிவித்த நீதியரசர் நாத், “சமைத்தல், சுத்தப்படுத்தல், கழுவுதல் உள்ளிட்ட எல்லா வேலைகளையும் இருவரும் சமமாகப் பகிர்ந்துகொள்ள வேண்டும். இருவரும் நேரில் ஆஜராகட்டும்” என்று உத்தரவிட்டார்.
வி. அருள்செல்வன்
