நாட்டின் தேசிய பாதுகாப்பு ஆரோக்கியம் நிறைந்து காணப்படுவதால் சுற்றுலாப் பயணிகள் அதிகம் நாட்டுக்கு வருகை தருகிறார்கள் என்று அம்பாறை மாவட்ட எம்பி ஏ. ஆதம்பாவா தெரிவித்துள்ளார்.
இலங்கை நாடு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையின் கீழ் இன்று சமாதானத்துடனும் சமத்துவத்துடன் அமைதியோடும் தேசிய பாதுகாப்பு மிக்க உலகின் மிகச் சிறந்த தீவாகத் திகழ்கிறது.
யாரும் அச்சம் கொள்ளத் தேவையில்லை. நாட்டின் நிதி வளமும் சிறப்பாக உள்ளது எனவும் அம்பாரை மாவட்ட தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினரும் ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவருமான ஆதம்பாவா தெரிவித்துள்ளார்.
அம்பாறை மாவட்டம் திருக்கோவில் பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே மேற்படி கருத்தினை அவர் தெரிவித்தார்.

இலங்கையில் இன்று காணப்படுகின்ற சிறப்பான தேசிய பாதுகாப்பு நிலைமைகள் காரணமாக உலகமெங்கும் இருந்து இலங்கைக்கு அதிகளவான சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்து காணப்படுகிறது.
அந்நிய செலாவணியும் அதிகரித்துள்ளது. அத்தோடு உலகில் சிறந்த தீவாகவும் எமது இலங்கை நாடு திகழ்கின்றமை ஒரு சிறப்பான விடயமாகும்.
இலங்கை வரலாற்றில் என்றும் இல்லாதவாறு இவ்வருடத்தில் சுமார் 13 இலட்சம் சுற்றுலாப் பிரயாணிகள் வருகை தந்துள்ளனர்.
இது நாட்டின் தேசிய பாதுகாப்பு ஆரோக்கியம் நிறைந்தது என்பதுடன் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் மீது உலக நாடுகள் கொண்டுள்ள நம்பிக்கையையும் எடுத்துக் காட்டுவதாக அமைந்துள்ளது.
திருக்கோவில் பிரதேச செயலாளர் தங்கையா கஜேந்திரன் ஒழுங்கமைப்பில் மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டம் திருக்கோவில் பிரதேச செயலகக் கேட்போர் கூடத்தில் நேற்று மாலை நடைபெற்றது.
தேசிய மக்கள் சக்தியின் இரண்டாவது பிரதேச அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் திருக்கோவில் பிரதேச அபிவிருத்திப் பணிகளுக்காக சுமார் 77.325 மில்லியன் ரூபாய் நிதிக்கான திட்டங்கள் சமர்ப்பிக்கப்பட்டு அனுமதி பெறப்பட்டது.
இக்கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர் எம். எஸ். அப்துல் வாசீத், திருக்கோவில் பிரதேச சபை தவிசாளர் எஸ். சசிகுமார், உதவிப் பிரதேச செயலாளர், உதவி திட்டமிடல் பணிப்பாளர், பிரதேச சபை உறுப்பினர்கள், பாராளுமன்ற உறுப்பினர்களின் செயலாளர்கள், அரச திணைக்கள அதிகாரிகள், பொலிஸ், இராணுவம், பொது அமைப்புகளின், பிரதிநிதிகள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
திருக்கோவில் எஸ்.கார்த்திகேசு
