இந்தியத் திரைப்பட நடிகர் கருப்புசாமி கொழும்புவில் திடீர் மரணம்!

கொழும்புவில் ஒளிப்பதிவு செய்யப்பட்டுக்கொண்டிருந்த இந்தியத் திரைப்படத்தில் நடிக்கவிருந்த மாத்தளையைச் சேர்ந்த அழகர் கருப்புசாமி என்ற 52 வயது நடிகர் திடீரென மரணமடைந்துள்ளார்.

கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டப வளாகத்தில் நேற்றுப் (21) பகல் ஒளிப்பதிவு நடந்தபோது கருப்புசாமி குளியலறையில் வீழ்ந்து உயிரிழந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

நடிகர் சூர்யா முதலானோர் நடிக்கும் இந்தப் படத்தில், இந்திய அரசியல்வாதியின் வேடமணிந்து நடிக்கவிருந்த வேளையிலேயே கருப்புசாமிக்கு இந்தத் துர்ப்பாக்கியம் நிகழ்ந்துள்ளது.

உடனடியாக அவர் கொழும்பு தேசிய மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப் பட்டபோதிலும் அவர் மரணமடைந்துவிட்டதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.