நாவற்குடா ஸ்ரீ கங்காணி பிள்ளையார் ஆலய வருடாந்த பிரம்மோற்சவம்

மட்டக்களப்பு நாவற் குடா அருள்மிகு ஸ்ரீ கங்காணி பிள்ளையார் ஆலய வருடாந்த பிரம்மோற்சவ கொடியேற்றத் திருவிழா

கிழக்கிலங்கையின் பிரசித்தி பெற்ற மட்டக்களப்பு ஸ்ரீ கங்காணி பிள்ளையார் ஆலய வருடாந்த உற்சவத்தின் கொடியேற்றத் திருவிழா இன்று நண்பகல் வெகு விமரிசையாக நடைபெற்றது.

வருடாந்த உற்சவத்தினை முன்னிட்டு நேற்று விநாயகர் வழிபாடு கிராம சாந்தி வாஸ்து சாந்தி பந்தக்கால் நாட்டல் கிரியைகள் ஆரம்பமாகி நடைபெற்று இன்று காலை ஆலயத்தின் பரிவார மூர்த்திகளுக்கு விசேட பூஜைகள் இடம்பெற்றன.

பெருமளவான அடியார்கள் பங்கு பற்றுதலுடன் அரோகரா கோஷம் முழங்க கொடியேற்ற திருச் சீலை கொடிக் கம்பத்துக்கருகே எடுத்துவரப்பட்டு பக்திப் பூர்வமாகக் கொடியேற்றம் நடைபெற்றது.

கொட்டகலை பிள்ளையார் ஆலய பிரதம குரு சிவ ஸ்ரீ கேதீஸ்வர பவித்திர குருக்கள் தலைமையில் கொடியெற்றம் நடைபெற்றது.

ஆலயத்தின் வருடாந்த உற்சவத்தினை முன்னிட்டு தினசரி காலை 7 மணி, மாலை 5 மணிக்கு நித்திய பூசை இடம்பெறுகிறது.தினசரி அபிஷேகம் பஞ்சமுக அர்ச்சனை, வசந்த மண்டப பூஜை தொடர்ந்து சாமி உள் வீதி வலம் வருதல் என்பனவும் நடைபெறும்.

இவ்வாலயத்தின் சிறப்பு திருவிழாக்களான மாம்பழத் திருவிழா 28.04.2026 அன்று இடம்பெற உள்ளது. 30.04.2026 அன்று காலை 8 மணி அளவில் தேர்த் திருவிழா நடைபெறும்.

இவ்வாலயத்தின் நிறைவுத்திருவிழா 01.05.2026 அன்று நண்பகல் தீர்த்த உற்சவம் இடம்பெற்று இனிதே நிறைவடையும்.

எஸ். வரதராஜன் – மட்டக்களப்பு