கொழும்பு, மருதானையில் இருந்து ஹட்டன் வழியாக வெலிமடை வரையில் முச்சக்கரவண்டியில் போதைப்பொருள் போக்குவரவில் ஈடுபட்டவர்கள் எனச்சந்தேகிக்கப்படும் இளைஞர்கள் இருவரை வட்டவளை பொலிஸார் இன்று (13) கைதுசெய்துள்ளனர்.
வெலிமடை பகுதியைச் சேர்ந்த 25 மற்றும் 27 வயதுடைய இளைஞர்களே இவ்வாறு கைத செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் மருதானை பகுதியில் வாடகைக்கு முச்சக்கரவண்டி ஓட்டுபவர்களென முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
ஈசி கேஸ் முறையில் பணத்தைப் பெற்றுக்கொண்டு, வீதிகளில் அடையாளம் காணப்பட்ட சில பகுதிகளில் போதைப்பொருளை வைத்துவிட்டுச் செல்கின்றனரென ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
மருதானையிலிருந்து வெலிமடை நோக்கி இவர்கள் முச்சக்கரவண்டியில் இன்று பயணித்துக்கொண்டிருந்தபோது, வட்டவளை பொலிஸ் நிலையத்துக்கு முன்னால் உள்ள சோதனைச் சாவடியில் அவர்கள் கைதுசெய்யப்பட்டனர்.
அவர்களிடமிருந்து கஞ்சா, ஹெரோயின், ஐஸ் ஆகிய போதைப்பொருள்கள் மீட்கப்பட்டன.
இவர்கள் வசமிருந்து 4 தொலைபேசிகளும் மீட்கப்பட்டுள்ளதுடன் 23.ஆயிரம் ரூபாய் பணமும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து சந்தேக நபர்களிடம் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
