ரணில் கைதுக்கு அரசியல் தலைவர்கள் கண்டனம்!

முன்னாள் ஜனாதிபதி ரணில் கைதுக்கு அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

முன்னாள் ஜனாதிபதிகள் சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க, மைத்திரிபால சிறிசேன, எதிர்க் கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச முதலானோர் கண்டனம் தெரிவித்துளளனர்.

அரசியல்வாதிகளுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் செயற்பாடுகளை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் ரணில் கைதுசெய்யப்பட்டதை வன்மையாகக் கண்டிப்பதாகவும் திருமதி சந்திரிகா தெரிவித்துள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கைதுசெய்யப்பட்டமை குறித்துத் தமது கருத்துகளைத் தெரிவிப்பதற்காகக் கொழும்புவில் எதிர்க் கட்சிகளின் கூட்டமைப்பு சார்பில் இன்று (24) செய்தியாளர் மாநாடு நடத்தப்பட்டது.

இதில் ஆளுங்கட்சியைத் தவிர பெரும்பாலான அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்துகொண்டு தமது கருத்தைத் தெரிவித்தனர்.

மைத்திரிபால சிறிசேன

ரணில் விக்கிரமசிங்க கைதுசெய்யப்பட்டதன் மூலம் நாட்டில் ஜனநாயகம் பிரச்சினைக்கு உள்ளாகியிருப்பதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க

முன்னாள் ஜனாதிபதி திருமதி சந்திரிகா மருத்துவ சிகிச்சையில் இருப்பதால், செய்தியாளர் சந்திப்பு நேரடியாக வரவில்லை.

அவரது எழுத்துமூலக் கண்டனத்தை ஐதேக பொதுச் செயலாளர் தலத்தா அத்துக்கோறள செய்தியாளர்களுக்கு வாசித்துக் காட்டினார்.

தவிரவும், எதிர்க் கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, பேராசிரியர் ஜி. எல். பீரிஸ், பாட்டலி சம்பிக்க ரணவக்க, நிமல் சிறிபால டி சில்வா, ரவி கருணாநாயக்க, மனோ கனேஷன் முதலானோரும் கண்டனம் தெரிவித்தனர்.

தேசிய மக்கள் சக்தியின் வழக்கறிஞர்கள்

முன்னாள் ஜனாதிபதி ரணில் கைதுக்கு அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்திருக்கும் தருணத்தில், தேசிய மக்கள் சக்தியின் வழக்கறிஞர்கள் கூட்டமைப்பும் செய்தியாளர் மாநாடு நடத்தியது.

அதில், ரணில் விக்கிரமசிங்க கைதுசெய்யப்பட்டிருப்பதால், தாமும் கைதாகலாம் என்ற அச்சத்தில் எல்லோரும் ஒன்று சேர்ந்து நீதிமன்றத்தை விமர்சிப்பதாக சட்டத்தரணிகள் சாடினர்.