கண்டி மாவட்ட பன்விலை தோட்டங்களுக்கு சிவப்பிரகாசம் விஜயம் மேற்கொண்டார்.
கண்டி மாவட்ட பன்விலை பிரதேச அலகொல, கலாபொக்க தோட்டங்களுக்கு திடீர் விஜயம் ஒன்றை மேற்கொண்டு அங்கு செயற்படுத்தப்பட்டு வரும் இயற்கை அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான வீடமைப்பு திட்டங்களை பெருந்தோட்ட சமுதாய உட்கட்டமைப்பு பிரதி அமைச்சின் பிரத்தியேக செயலாளர், தேசிய மக்கள் சக்தியின் தேசிய செயற்பாட்டுக் குழு உறுப்பினரும் கண்டி மாவட்ட நிறைவேற்றுக் குழு உறுப்பினருமான கலாநிதி பி.பி. சிவப்பிரகாசம் பார்வையிட்டார்.
இங்குப் பாதிக்கப்பட்ட பொதுமக்களிடம் கருத்து தெரிவிக்கும் போது
மலையகத்திலே இயற்கை அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு வீடுகளை வழங்கும் திட்டத்தின் கீழ் ஜனாதிபதியின் கருத்தியல் படி இந்திய அரசு உதவியுடன் 4700 வீடுகளை வழங்கும் திட்டத்தின் கீழ் இந்த வீடமைப்பு திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன என்று குறிப்பிட்டார்.
இந்தத் தோட்டங்களில் மண் சரிவினால் பாதிக்கப்பட்ட மக்கள் கடந்த 10 வருடங்களுக்கு மேலாக வீடுகள் இன்றி உயிர் ஆபத்தை எதிர்நோக்கி வருகின்றனர். ஆனால் இவர்களுக்கான வீடமைப்புத் திட்டங்கள் சரியான முறையில் கடந்த காலங்களில் அமுல்படுத்தப்படவில்லை.


அவற்றிலே அரசியல் தலையீடு காரணமாக பல அசம்பாவிதங்கள் இடம்பெற்றுள்ளன.
ஆனால் அவற்றை நாம் நேரடியாக சென்று ஆய்வு செய்து நியாயமாக வீடு அமைப்பு திட்டங்களை வழங்குவதற்கு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றோம்.
எனவே இன்றைய இந்த நடவடிக்கைகளை அவதானிப்பதற்காக பிரதேச செயலக உறுப்பினர்கள், தோட்ட நிர்வாகம், டிரஸ்ட் நிறுவனம், தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம், பிரஜா சக்தி நிறுவனம் போன்றவற்றிலிருந்து உத்தியோகபூர்வமாக உறுப்பினர்கள் என்னுடன் இணைந்துள்ளனர்.
எனவே திட்டம் நியாயமாக நடைபெறும் என்பதில் சந்தேகம் இல்லை என்று குறிப்பிட்டார்.
மேலும் சிவப்பிரகாசம் கருத்து தெரிவிக்கும் போது:
ஜனாதிபதி பாதிக்கப்பட்ட பெருந்தோட்ட மக்களுக்கான வீடமைப்பு திட்டங்களை வழங்குவதில் மிகக் கரிசனை காட்டி வருகின்றார்.
அதேபோல் இன்றைய தினம் கூட பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் இரத்தினபுரி மாவட்டத்தில் தோட்டங்களுக்கு விஜயத்தை மேற்கொண்டு உள்ளார். எனவே எமது அமைச்சு பெருந்தோட்ட மக்களின் அபிவிருத்தி குறித்து மிக காவனமெடுத்து வருகின்றது.
கண்டி மாவட்டத்தைப் பொறுத்தளவில் பல தோட்டங்களில் மண் சரிவு அபாயம் காணப்பட்டு கட்டிட ஆய்வு மையத்தின் அறிக்கையின் படி வீடமைப்பு திட்டங்களுக்கான காணி ஒதுக்கீடுகள் நடைபெற்று வருகின்றன.
என்றாலும் கூட பயனாளிகளின் தெரிவு பல்வேறு சிக்கல்களை ஏற்படுத்தி இருக்கின்றது. காணி தெரிவு சம்பந்தமாகவும் பல சிக்கல்களை உருவாக்கியுள்ளன.
அதேபோல் பயனாளிகளின் ஒத்துழைப்பு குறித்தும் நாம் மீள்பரிசீலனை செய்ய வேண்டி உள்ளது. எனவே தான் குறிப்பிட்ட அரசாங்க நிறுவனங்களைச் சார்ந்தவர்களை ஒருங்கிணைத்து இந்த கலந்துரையாடல்கள் நடைபெற்று வருகின்றன.
பன்விலை தோட்டங்களுக்கு சிவப்பிரகாசம் விஜயம் செய்ததன் மூலம் வீடமைப்புத் திட்டங்களைத் துரிதப்படுத்தலாம் என நம்புவதாகக் கூறினார்.
அடுத்து வருகின்ற வாரங்களில் ஏனைய தோட்டங்களுக்கும் விஜயம் செய்வதன் மூலம் கண்டி மாவட்டத்தில் ஆரம்பகட்ட வீடமைப்பு திட்டத்திற்கான செயற்பாடுகளை ஊக்குவிக்கலாம்.
இதற்கு கண்டி மாவட்ட பிரஜைகள், தொழிற்சங்கங்கள், சிவில் அமைப்புகள் போன்றோர் இடையே ஓர் இணக்கப்பாட்டின் ஊடாக செயற்பாடுகள் ஒருங்கிணைக்கப்பட உள்ளன.
பன்விலை ம. நவநீதன்

