புலுக்குனாவையில் சேதமடைந்த மின் கம்பத்தை சீரமைக்க கோரிக்கை!

காட்டு யானை தாக்கத்தினால் சேதமடைந்த மின்கம்பத்தை புனரமைத்துத் தருமாறு விவசாயிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

மட்டக்களப்பு பட்டிப்பளை பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட புலுக்குனாவை விவசாயக் குளத்தை அண்டிய பகுதிகளில், காட்டு யானைத் தாக்கத்திலிருந்து அப்பகுதி பொதுமக்களைப் பாதுகாக்கின்ற மின்சார வேலிக்கு மின்சாரத்தை வழங்கி இணைக்கின்ற அதிவலு கொண்ட மின்சாரத்தூண் கடந்த சில நாள்களாகக் காட்டு யானைத் தாக்கத்தினால் நிலத்தில் விழுந்து கிடக்கின்றது.

அதனால், அப்பகுதியில் விவசாய நடவடிக்கைகளில் ஈடுபடும் விவசாயிகள்,கால்நடை வளர்ப்போர், நன்னீர் மீன்பிடியாளர்கள் பாரிய அச்சுறுத்தலுக்கு முகம் கொடுத்துள்ளனர்

இதனால் எதிர்வரும் காலங்களில் ELNINO தாக்கத்தினால் அதிக மழை வீழ்ச்சி கிடைக்க வாய்ப்புள்ளதால், அப்பகுதி மக்கள் வாழ்வாதார நடவடிக்கைகளில் ஈடுபடுகின்ற போது மின்சாரத் தாக்கத்திற்கு உள்ளாகின்ற சந்தர்ப்பம் உருவாகும்.

எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக இதனைப் புனரமைத்து இப்பகுதி மக்களின் பாதுகாப்பினை உறுதி செய்யுமாறு வேண்டுகோள் விடுக்கின்றனர்.

எஸ். வரதராஜன்