ஜனாதிபதி மட்டக்களப்புவிற்கு உத்தியோகபூர்வ விஜயம்

ஜனாதிபதி மட்டக்களப்பு மாவட்டத்திற்கான உத்தியோகபூர்வ விஜயத்தை நாளை (20) மேற்கொள்கிறார். அதனை முன்னிட்டு மாவட்டத்தில் விசேட பாதுகாப்பு போக்குவரத்து ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தினால் கிழக்கு மாகாணத்தில் வளர்ச்சியே இலக்கு மக்களுக்காக ஒன்றிணைந்து நாட்டை உருவாக்குவோம் எனும் திட்டத்தின் கீழ் பாரிய அபிவிருத்திப் பணிகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கா நாளை மாவட்டத்திற்கு முதல் தடவையாக அபிவிருத்தி திட்டங்களை மக்களின் பாவனைக்காக கையளிக்கும் முகமாக வருகைதருகிறார்.

அதன் ஒரு கட்டமாக முதலாவது நிகழ்வாக 345 மில்லியன் ரூபாய் செலவில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட இலங்கையின் இரண்டாவது பெரிய வாசிக சாலையும் கிழக்கு மாகாணத்தில் முதலாவதுமான மட்டக்களப்பு பொது நூலகக் கட்டடத்தைக் காலை 9.30 அளவில் திறந்து வைக்கிறார்.

அதனைத் தொடர்ந்து மட்டக்களப்பு பழைய மாவட்ட செயலக கட்டடத்தில் மாவட்ட ஒருங்கிணைப்பு அபிவிருத்தி குழுக் கூட்டம் ஜனாதிபதி தலைமையில் புதிய அரசாங்கத்தினால் முதல் தடவையாக நடைபெறுகிறது.

அதனைத் தொடர்ந்து பிற்பகல் 1.30 அளவில் 3 ஆவது நிகழ்வாக
“முழு நாடும் ஒன்றாக” தேசிய செயல்திட்ட நிகழ்வு ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கா தலைமையில் மட்டக்களப்பு வெபர் மைதானத்தில் நடைபெறுகிறது.
எஸ். வரதராஜன்