அம்பாறை பகுதியைச் சேர்ந்த இளம் பெண்ணொருவர் நுவரெலியா, மார்காஸ் தோட்டம் பகுதியில் சுற்றுலா விடுதியொன்றில் (கபானா) படுகொலை செய்யப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.
அம்பாறை பகுதியைச் சேர்ந்த 27 வயதுடைய பியூமி தில்ஷானி என்ற இளம் பெண்ணே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.
இந்தப் பெண், நுவரெலியா தேரிப்பஹ பகுதியில் வசிக்கும் தனது 27 வயதுடைய காதலனுடன் கடந்த 07ஆம் திகதி சுற்றுலா விடுதிக்கு வருகை தந்து, கட்டணம் செலுத்தி அறையை முன்பதிவு செய்துள்ளார்.
இந்நிலையில், இன்று (10) காலை பெண் விடுதிக்குள் காயங்களுடன் விழுந்து கிடப்பதைக் கண்ட விடுதியின் உரிமையாளர்,, இது தொடர்பில் நுவரெலியா பொலிஸாருக்கு அறிவித்துள்ளார். இதனையடுத்து சம்பவ இடத்துக்குச் சென்ற பொலிஸார் பெண்ணின் சடலத்தைக் கண்டெடுத்துள்ளனர்.
சம்பவத்துடன் தொடர்புடையதாகச் சந்தேகிக்கப்படும் காதலன் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளதாகவும், அவரைக் கைது செய்வதற்கான விசாரணைகளைப் பொலிஸார் ஆரம்பித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சடலம் தொடர்பில் நுவரெலியா நீதவானின் ஸ்தலப் பரிசோதனை முன்னெடுக்கப்பட்ட பின்னர், பிரேதப் பரிசோதனைக்காக நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரியிடம் ஒப்படைக்கப்படுமெனப் பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.
நானுஓயா நிருபர்
