பிக்குமாரின் சத்தியாக்கிரகத்திற்குத் தடை விதித்து கொழும்பு நீதவான் நீதிமன்றம் விடுத்த உத்தரவை இரத்துச்செய்யுமாறு கோரி, முன்னாள் அமைச்சர் உதய கம்மன்பில, மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் நீதிப்பேராணை (ரிட் மனு) மனுவொன்றைத் தாக்கல் செய்துள்ளார்.
சிறைவாசம் அனுபவிக்கும் கலகொட அத்தே ஞானசார தேரரை விடுதலை செய்ய வலியுறுத்தி, ொொகொழும்பு விகாரமகாதேவி பூங்காவில் பெளத்த தேரர்கள் சத்தியாக்கிரகப் போராடட்த்தை ஆரம்பித்தனர். அதற்குக் கறுவாத்தோட்டம் பொலிஸாரின் கோரக்கைக்கு அமைய நீதிமன்றம் தடை உத்தரவைப் பிறப்பித்தது.
இந்த உத்தரவை ரத்துச்செய்யக்கோரி தாக்கல் செய்துள்ள மனுவில்,பிரதிவாதிகளாக கறுவா தோட்டம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, பொலிஸ் மாஅதிபர், சட்ட மாஅதிபர், கொழும்பு பிரதான நீதவான் உள்ளிட்டோரை திரு.கம்மன்பில பெயரிட்டுள்ளார்.
நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டு தொடர்பில் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட கலகொடஅத்தே ஞானசார தேரரை விடுதலை செய்யக் கோரி பிக்குகள் குழுவொன்று கொழும்பு விகாரமாதேவி பூங்காவில் உள்ள புத்தர் சிலைக்கு அருகில் சத்தியகிரகப் போராட்டத்தை ஆரம்பித்ததாக மனுதாரர் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த 21 ஆம் திகதி கறுவாத்தோட்டம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியினால் குற்றவியல் நடைமுறைச் சட்டக் கோவையின் 106 வது பிரிவின் பிரகாரம் கொழும்பு பிரதம நீதவான் நீதிமன்றத்தில் விடயங்கள் சமர்ப்பிக்கப்பட்டு, சத்தியகிரகப் போராட்டத்தை அவ்விடத்திலிருந்து அகற்றுவதற்கான உத்தரவு பெறப்பட்டுள்ளதாகவும் மனுதாரர் சுட்டிக்காட்டியிருக்கிறார்.
கொழும்பு பிரதம நீதவான் நீதிமன்றம் வழங்கிய குறித்த உத்தரவு முற்றிலும் சட்டத்திற்கு முரணானது எனச் சுட்டிக்காட்டிய மனுதாரரான உதய கம்மன்பில, மனித உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படும் சந்தர்ப்பம், தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படும் சந்தர்ப்பம் அல்லது பொதுச் சுகாதாரத்திற்கு அச்சுறுத்தல் ஏற்படக்கூடிய அவசர சந்தர்ப்பங்களில் மட்டுமே இத்தகைய உத்தரவை பிறப்பிக்க முடியும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
அந்த முறைப்பாட்டில் பிரதிவாதிகளாகப் பெயரிடப்பட்டுள்ள வண. உலப்பனே சுமங்கல தேரர், வண.பலாங்கொடை கஸ்ஸப தேரர் உள்ளிட்ட சிவில் சமூக செயற்பாட்டாளர்களை நீதிமன்றத்திற்கு அழைத்து, அது தொடர்பில் விடயங்களை வினவ முடியும் என்ற நிலையில், கொழும்பு பிரதம நீதவான் ஒருபக்கச் சார்பாக உத்தரவைப் பிறப்பித்துள்ளதாகவும் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இலங்கை அரசியலமைப்பின் 09 வது பிரிவின் கீழ் பௌத்த மதத்தைப் பாதுகாத்துப் போஷிப்பதற்கு அரசாங்கம் கடமைப்பட்டுள்ளது. இந்த உத்தரவின் மூலம் அந்த அரசியலமைப்பின் நிலைமை மீறப்பட்டுள்ளதாகவும் மனுதாரர் குற்றம் சுமத்தியுள்ளார்.
அதற்கமைய, கொழும்பு பிரதம நீதவான் நீதிமன்றத்தினால் பிறப்பிக்கப்பட்ட உத்தரவை செல்லுபடியற்றதாக்கும் உத்தரவைப் பிறப்பிக்குமாறு கோருவதுடன், உத்தரவிற்கமைய செயற்படுவதைத் தடுக்கும் உத்தரவை பொலிஸ் மா அதிபர் உள்ளிட்ட பிரதிவாதிகளுக்கு வழங்குமாறும் மனுதாரர் கோரியுள்ளார்.
இது தவிர, இந்த மனு விசாரணை நிறைவடையும் வரை கொழும்பு பிரதம நீதவான் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை இடைநிறுத்துவதற்கான இடைக்காலத் தடை உத்தரவொன்றை வழங்குமாறும் மனுதாரர் உதய கம்மன்பில மேலும் கோரியுள்ளார்.
