சம்மாந்துறை பிரதேச பிரச்சினைகள் தீர்க்க ஒருங்கிணைந்த முயற்சி!

சம்மாந்துறை பிரதேசத்தின் அபிவிருத்தி மற்றும் விவசாயிகளின் நலன் தொடர்பான ஒருங்கிணைப்புக் கூட்டம், கரையோரப் பிரதேசங்களின் ஒருங்கிணைப்புத் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான அபூபக்கர் ஆதம்பாவா தலைமையில் சம்மாந்துறை ஜனாதிபதி விளையாட்டு அரங்கு கட்டடத் தொகுதியில் 2026.10.27ஆம் திகதி நடைபெற்றது.

பிரதேச செயலாளர் தேசபந்து எஸ்.எல். முஹம்மது ஹனிபா, பிரதேச சபைத் தவிசாளர் ஐ.எல்.எம். மாஹிர், அம்பாறை மாவட்ட செயலக பிரதம கணக்காளர் ஏ.எல். மஹ்ரூப், பிரதேச உப செயலாளர் பீ. பாசித் அகமட், பிரதேச செயலக கணக்காளர் எஸ்.எல். சத்தார் மிர்ஸா,பிரதி திட்டமிடல் பணிப்பாளர் கே.எல். ஹம்சா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

அப்போது சம்மாந்துறை பிரதேசத்தின் அபிவிருத்தி, விவசாயிகளின் நலன்,உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல் தொடர்பாகப் பல முக்கிய தீர்மானங்கள் எடுக்கப்பட்டன.

25,000 ஏக்கருக்கும் அதிகமான நிலப்பரப்பில் வேளாண்மைச் செய்கையில் ஈடுபடும் விவசாயிகளின் நலனைக் கருத்திற்கொண்டு, சம்மாந்துறை வீரமுனை 04ஆம் கிராம சேவகர் பிரிவில் தற்போதுள்ள நெற்களஞ்சியசாலைக்கு அண்மையில் புதிய நெற்களஞ்சியசாலையொன்றை அமைப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டது.

மேலும், பழைமையானதும் சிதைவடைந்த நிலையிலுள்ளதுமான பல்லாத்துப் பாலத்தை விரைவாகப் புனரமைத்து, புதிய பாலமாக அமைப்பதற்கும் தீர்மானிக்கப்பட்டது.

சம்மாந்துறை அப்துல் மஜீத் மண்டபத்தில் திருத்த வேலைகள் நடைபெற்று வருவதால், அல்-மர்ஜான் பாடசாலையின் ஆராதனை மண்டபத்தைத் பாடசாலை கல்வி அபிவிருத்தி குழு முடிவுகளுடன் தற்காலிகமாகப் பொதுமக்களின் பயன்பாட்டுக்கு வழங்குவது தொடர்பிலும் தீர்மானிக்கப்பட்டது.

அத்துடன், 2027ஆம் ஆண்டு மாவட்ட அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் கீழ், விவசாயிகளின் நலனைக் கருத்திற்கொண்டு 400 மில்லியன் ரூபா செலவில் வளத்தாப்பிட்டி குளத்தைப் புனரமைப்பதற்கும், 100 மில்லியன் ரூபா செலவில் குருணல் கஞ்சி அணைக்கட்டை புதிய அணைக்கட்டாக அமைப்பதற்கும் திட்டமிடப்பட்டது.

மேலும், கல்லரிச்சல் 1 மற்றும் 2ஆம் கிராம சேவகர் பிரிவுகளில் அமைந்துள்ள S/29 வாய்க்கால் வீதியில், கொருக்காய்ப்புலியற்ற சந்தையிலிருந்து முஸ்தக்கீன் பள்ளிவாசல் வரையான சுமார் 400 மீற்றர் தூரப் பகுதியில் வடிகால் அமைப்பதற்கும் தீர்மானிக்கப்பட்டது.

இக்கூட்டத்தில் சம்மாந்துறை பிரதேசத்திலுள்ள சகல திணைக்களங்களினதும் தலைவர்கள் மற்றும் உயரதிகாரிகள், முப்படையினர், பொலிஸ் பொறுப்பதிகாரிகள், மஜ்லிஸ் அஷுறா பிரதிநிதிகள், நம்பிக்கையாளர் சபையின் பிரதம நம்பிக்கையாளர் எம்.எல்.அப்துல் மஜீட் (சத்தார்), செயலாளர் ஹ எம்.ஐ. இஸ்ஹாக் ,பாராளுமன்ற உறுப்பினர் ஆதம்பாவின் செயலாளர் வீ ஏ . ஜெசீல், பாராளுமன்ற உறுப்பினர் தாஹிர் செயலாளர் – எஸ். முஹம்மட் அலி ஜின்னா(ஆசிரியர்), பிரதேச சபை உறுப்பினர்களான நபாஷ், கபூர்,ஜெயசந்திரன், அப்னான்,காலித், நயிம் (ஆசிரியர்), நளிம், ஹாதிக் இப்ராஹிம்,விவசாய அமைப்புக்களின் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.

சம்மாந்துறை ஜலீல்