பத்தேகமை துப்பாக்கிச் சூட்டில் மூன்றாவது நபரும் உயிரிழப்பு

காலி பத்தேகமை துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வந்த மற்றைய பெண்ணும் நேற்று (28) உயிரிழந்தார்.

காலி பத்தேகமவில் நேற்று முன்தினம் (27) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஏற்கனவே இருவர் உயிரிழந்தனர்.

இந்தச் சூடு, ஒருங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பலைச் சேர்ந்த லொகு பெட்டியின் முக்கிய போட்டியாளரும் வெளிநாட்டில் தலைமறைவாக உள்ளவருமான ‘கரந்தெனிய சுத்தாவினுடைய’ தரப்பினால் நடத்தப்பட்டிருக்காம் எனப் பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

முச்சக்கரவண்டியைப் பின்தொடர்ந்து காரில் வந்த குழுவினர் T-56 ரக துப்பாக்கியால் சூட்டை நடத்திவிட்டுத் தப்பிச் சென்றனர்.

சூடு நடத்தியவர் எவ்வித பயமும் சந்தேகமுமின்றி நபர் ஒருவரை இலக்கு வைத்துத் துரத்தித் துரத்திச் சுடும் காட்சி சி.சி.டி.வி கெமராக்களில் பதிவாகியுள்ளது.

அங்கு கீழே விழுந்த பெண்ணைச் சுட்ட துப்பாக்கிதாரி, அதன் பின்னர் தப்பிச் சென்ற பெண்ணை நோக்கியும் பலமுறை துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளார். பின்னர் அவர்கள் வந்த காரிலேயே தப்பிச் சென்றுள்ளனர்.

இச்சம்பவத்தில் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான முச்சக்கரவண்டி சாரதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். காயமடைந்த இரு பெண்கள் பத்தேகம வைத்தியாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் மேலதிக சிகிச்சைக்காக காராபிட்டி போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டனர். அங்குப் பெண்ணொருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

துப்பாக்கிச் சூட்டிலிருந்துதப்பிக்க ஓடிய பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அவர் அம்பலாங்கொட செஞ்சிலுவை வீடமைப்புத் திட்ட, கொடஹேன பகுதியைச் சேர்ந்த சுசிதா இரோஷனி என்ற 47 வயதுடைய பெண் ஆவார்.

‘களு நோனா’ என்ற பட்டப்பெயரில் அறியப்பட்ட இவர், தற்போது சிறையில் இருக்கும் போதைப்பொருள் கடத்தல்காரரான ‘லொகு பெட்டியின் விற்பனை வலையமைப்பின் முக்கிய பெண்ணாக இருந்தவர் என்பது தெரியவந்துள்ளது.

உயிரிழந்த ஆண், மீட்டியாகொட பகுதியைச் சேர்ந்த லலித் பிரசன்ன டி சில்வா என்ற 40 வயதுடைய வாடகை முச்சக்கரவண்டிச் சாரதியாவார்.

இந்தத் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துடன், இந்த ஆண்டில் இதுவரை 39 துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. அவற்றில் 21 பேர் உயிரிழந்து மேலும் 21 பேர் காயமடைந்துள்ளனர்.