இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் பணிப்பாளர் எவான் பாபஜார்ஜியோ (Evan Papageorgiou) தலைமையிலான பிரதிநிதிகள் குழு, பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரியவை நேற்று (22) பாராளுமன்றத்தில் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது.
சர்வதேச நாணய நிதியத்தின் நீடிக்கப்பட்ட நிதியமைப்பின் கீழ் இலங்கையின் பொருளாதார சீர்திருத்தத் திட்டத்தின் முன்னேற்றம் மற்றும் எட்டப்பட்ட முடிவுகள் தொடர்பான ஏழாவது மதிப்பாய்வு குறித்து அப்போது சிறப்பு கவனம் செலுத்தப்பட்டது.
சவாலான சூழ்நிலைகளுக்கு மத்தியிலும் இலங்கை பொருளாதாரத்தை முகாமைத்துவம் செய்து அடைந்துள்ள முன்னேற்றம் குறித்துக் குறிப்பிட்ட பிரதமர், பாரிய சவால்களுக்கு மத்தியிலும் பொருளாதார ஸ்திரத்தன்மையைப் பேண அரசாங்கம் அர்ப்பணிப்புடன் உள்ளதாக வலியுறுத்தினார்.
அரசாங்கம் ஆட்சிக்கு வந்து இரண்டு ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில் எட்டப்பட்டுள்ள முன்னேற்றம் குறித்துக் குறிப்பிட்ட பிரதமர், IMF வெளிப்படைத் தன்மையுடன் வழங்கி வரும் ஆதரவைப் பாராட்டினார்.
பொருளாதார ஸ்திரத்தன்மைக்கு அப்பால் சென்று நிலையான பொருளாதார வளர்ச்சியை அடைவதற்கு அரசாங்கம் எடுக்கும் முயற்சிகளுக்குத் தொடர்ந்து ஆதரவளிக்க IMF காட்டியுள்ள விருப்பத்திற்கும் அவர் தனது நன்றியைத் தெரிவித்தார்.
அதேபோல், வௌிப்புற காரணிகளை திறம்பட முகாமைத்துவம் செய்வதன் முக்கியத்துவத்தை வலியுறுத்திய பிரதமர், அபிவிருத்தி பங்காளர்களுடன் பணியாற்றும்போது நிலையான, பொறுப்புக்கூறல் கொண்ட மற்றும் அனைவரும் உள்ளடங்கிய பொருளாதார வளர்ச்சியை அடைவதில் கவனம் செலுத்த வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.
ஊழல் எதிர்ப்புச் சட்டத்தில் முன்மொழியப்பட்டுள்ள திருத்தங்கள் குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டதுடன், இலஞ்ச அல்லது ஊழல் விசாரணை ஆணைக்குழுவிடம் சொத்து பிரகடனங்கள் மூலம் சமர்ப்பிக்கப்படும் தகவல்களின் தனியுரிமை மற்றும் வெளிப்படைத்தன்மைக்கு இடையே சமநிலையைப் பேணுவதன் முக்கியத்துவம் குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது.
