மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு ஊக்குவிப்பு கொடுப்பனவு

மட்டக்களப்புவில் பல்கலைக்கழக மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு ஊக்குவிப்பு கொடுப்பனவு பிரதமர் தலைமையில் இன்று (12) வழங்கப்பட்டது.

மாற்றுத்திறனாளி பல்கலைக்கழக மாணவர்களைப் பாராட்டும் தேசிய நிகழ்ச்சித் தொடரின் மூன்றாவது நிகழ்ச்சி பிரதமரும் கல்வி, உயர்கல்வி,தொழிற்கல்வி அமைச்சருமான கலாநிதி ஹரிணி அமரசூரிய தலைமையில் இன்று (12 ) மட்டக்களப்பில் நடைபெற்றது.

ஜனாதிபதி நிதியத்தின் ஏற்பாட்டில் கிழக்குப் பல்கலைக்கழகத்தின் சுவாமி விபுலானந்த அழகியல் கற்கைகள் நிறுவகத்தின் (SVIAS) இராஜதுரை அரங்கில் நடைபெற்ற இந்நிகழ்வில், மாற்றுத்திறனாளி பல்கலைக்கழக மாணவர்களுக்கு பிரதமர் ஊக்குவிப்பு கொடுப்பனவுக்கான காசோலைகளை வழங்கினார்.

55 மாற்றுத்திறனாளி பல்கலைக்கழக மாணவர்கள் பாராட்டி கௌரவிக்கப்பட்டனர்.

மாணவர்களின் கல்வி சாதனைகள் மற்றும் திறமைகளை ஊக்குவிப்பதுடன், சமூகத்தில் அவர்களுக்கான சம வாய்ப்புகளை உறுதிப்படுத்தும் நோக்கில் இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டது.

மேலும் ஜனாதிபதி செயலகத்தின் செயற்பாடுகளை பிரதேச மட்டத்தில் சிறப்பாகவும் பன்முகப்படுத்தப்பட்ட வகையிலும் முன்னெடுத்த பிரதேச செயலகங்களைப் பாராட்டும் நிகழ்வும் இதன்போது இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

இந்நிகழ்வில் சுவாமி நிலமாதவானந்த ஜீ மஹாராஜ், சபாநாயகர் கலாநிதி ஜகத் விக்கிரமரத்தின, கிழக்கு மாகாண ஆளுநர் ஜயந்தலால் ரத்னசேகர, கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சர் சுனில் ஹந்துன்னெத்தி, மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் பிரதேச ஒருங்கிணைப்பு குழு தலைவருமான கந்தசாமி பிரபு, ஜனாதிபதி நிதியத்தின் செயலாளர் ரோசான் கமகே, கிழக்கு மாகாண செயலாளர், மட்டக்களப்பு, திருகோணமலை மற்றும் அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர்கள், பல்கலைக்கழக உப வேந்தர்கள், என உயர் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

சா. நடனசபேசன், மட்டக்களப்பு