இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட வேண்டும் என்ற உள்நோக்கத்துடனேயே அவரது பாதுகாப்பு விலக்கிக்கொள்ளப்பட்டதாக மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி விவாதத்துக்குரிய ஒரு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
சோனியா காந்தியின் சுயசரிதை நூல் குறித்த கலந்துரையாடல் காணொளியில் சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோர் பங்கேற்றுப் பேசினர்.
அப்போது 1991ஆம் ஆண்டு ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்படுவதற்கு முன்பு நடந்த சம்பவங்களை அவர்கள் நினைவுகூர்ந்தனர்.
1989 தேர்தலில் காங்கிரஸ் தோல்வியடைந்த பிறகு, அப்போதைய வி.பி. சிங் தலைமையிலான இந்திய அரசு, ராஜீவ் காந்தியின் கமாண்டோ பாதுகாப்பைக் குறைத்ததாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இதுகுறித்து ராகுல் காந்தி குறிப்பிட்டுள்ளார்.
“1991 மே மாதம் பீகாரில் நடந்த தேர்தல் பிரசாரப் பயணம் ஒரு திருப்புமுனையாக அமைந்தது. திறந்த வாகனத்தில் சென்ற எங்கள் மீது கற்கள் வீசப்பட்டன. அன்றே நான் என் தாயிடம், ‘அப்பாவின் பாதுகாப்பைச் சரிசெய்யாவிட்டால், மிக விரைவில் அவரது இறுதிச் சடங்கிற்காக நான் திரும்பி வர வேண்டியிருக்கும்’ என எச்சரித்தேன்.
“அப்பாவின் பாதுகாப்பு தற்செயலாகக் குறைக்கப்படவில்லை. அவர் கொல்லப்பட வேண்டும் என்பதற்காகவே திட்டமிட்டு விலக்கப்பட்டது,” என்று ராகுல் காந்தி கூறியுள்ளார். எதிர்க்கட்சி ஆளும் மாநிலங்களில் ராஜீவ் காந்தியின் பாதுகாப்பில் போதிய கவனம் செலுத்தப்படவில்லை என்றும் பீகார் சுற்றுப்பயணம் மிகவும் அச்சமூட்டுவதாக இருந்தது என்றும் சோனியா காந்தியும் குறிப்பிட்டுள்ளார்.
பீகார் பிரசாரத்துக்குப் பின்னர், மே 21ஆம் தேதி தமிழகத்தின் ஸ்ரீபெரும்புதூரில் நடந்த தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் மனித வெடிகுண்டு தாக்குதலில் ராஜீவ் காந்தி கொல்லப்பட்டார்.
