22 ஆம் திருத்தத்தை வரவேற்கும் பொன்சேகா, அரசாங்கத்தின் முயற்சியை வரவேற்பதாகத் தெரிவித்துள்ளார்.
உயர் நீதிமன்ற மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்கள் உள்ளிட்ட நீதிபதிகளின் ஓய்வு வயதெல்லையை நீடிப்பதற்கான அரசாங்கத்தின் முயற்சிகள் வரவேற்கத்தக்கவையாகும்.
எனது அனுபவத்துக்கமைய அந்தத் தீர்மானத்தை நான் அனுமதிக்கிறேன். தனிப்பட்ட நபர்களின் பயத்துக்காக எதுவும் செய்ய முடியாது. அது தனிநபர்களின் பிரச்சினை. பொதுவாக பார்த்தால் இது மிகவும் சிறந்த தீர்மானமாகும்.
காலத்துக்கு தேவையான தீர்மானமென்றே கருதுகிறேன்” என்று பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்தார்.
இரத்தினபுரி பிரதேசத்தில் நேற்று முன்தினம் (23) இடம்பெற்ற மக்கள் சந்திப்பொன்றின்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,
‘‘நாட்டில் நீண்ட காலமாக மிகவும் ஊழல் நிறைந்த அரசியல் கலாசாரம் இருந்தது. பணம் இருக்கும் நபர்கள் தொடர்ந்தும் திருடி, மக்களின் பணத்தை சூறையாடுமளவுக்கு அந்த ஊழல் தலைதூக்கியிருந்தது. உலக நாடுகளுடன் ஒப்பிடும்போது எமது நாட்டில் நூற்றுக்கு 70 சதவீதத்துக்கும் அதிகமானவர்கள் வறுமையாளர்கள்.
பெரும் பொருளாதார நெருக்கடிக்குள்ளாகியிருக்கிறார்கள். மேற்குறிப்பிட்டது போன்று மக்களின் பணத்தை சூறையாடி, அதனூடாக வாக்கு வங்கிகளையும் உழைத்த கலாசாரமே நிலவி வருகிறது.
அந்த ஊழல் நிறைந்த அரசியல் கலாசாரத்தினால் நாட்டையும் மக்களையும் நேசித்த நேர்மையான புத்திசாலித்தனமான அரசியல்வாதிகள் மக்கள் பிரதிநிதிகளாக தெரிவுசெய்யப்படவில்லை.
நாட்டை சூறையாடும் ஏமாற்றுக்காரர்கள் மாத்திரம் பிரதிநிதிகளாக தெரிவுசெய்யப்பட்டதன் பிரதிபலனாக நாடு சீரழிவை சந்தித்தது.
ஊழல் நிறைந்த அரசியல் காலாசாரத்தினால் அரசியலும் திரிவடைந்தது. அந்த திரிவடைந்த அரசியல் கடந்த தேர்தலுடன் ஓரளவு நேர்மறையாக மாறியுள்ளது. இது மகிழ்ச்சிக்குரிய விடயமாகும்.
இருந்தபோதும், அரசியல் புதிய கலாசாரத்துக்குள் காலெடுத்து வைத்திருந்தாலும் பல காலமாக பின்பற்றிவந்த அரசியல் நடத்தைகள் இன்னும் மக்கள் மத்தியில் இருக்கின்றன.
எனவே, இன்னும் மக்கள் அரசியல் அலையை நோக்கிப் பயணிக்கும் நிலைமையை அவதானிக்கக் கூடியதாக இருக்கிறது.
இது நாட்டுக்கு ஏற்புடையதாக இருக்குமென்று நான் நம்பவில்லை. எனவே, வாக்களிக்கும்போது வாக்களிக்கும் நபரை நன்கு ஆராய்ந்து வாக்களித்து பழக்கப்பட வேண்டும்.
அவ்வாறு இல்லாவிட்டால் கட்சிகளுக்கு அடிமையாகும் பண்பு தொடரும்.
பொருளாதார நெருக்கடியுடன் ஊழல் அரசியலிலிருந்து மக்கள் விடுபட்டுள்ளார்கள். எனவே, இதற்குச் சிறந்த அடித்தளமொன்றை இட்டு கட்டியெழுப்பவேண்டும்.
அவ்வாறு இல்லாவிட்டால் தற்போதைய அரசாங்கத்தின் சிறு தவறினால் மக்கள் பழைய நிலைமைக்கு திரும்பினால் மீண்டும் ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்து அதிலிருந்து மீட்டெடுப்பதற்கு 70 ஆண்டுகள் காத்திருக்க வேண்டிவரும்.
தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் மாற்றத்தை மக்கள் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்ல வேண்டும். எதிர்க்கட்சியின் வெற்றிடம் இருக்கிறது.
இந்த நாட்டுக்கு நேர்மையான, வினைத்திறன், உண்மையான, புத்திசாலித்தனமான அரசியல்வாதிகளுடனான எதிர்க்கட்சி அவசியமென்று கருதுகிறேன். மக்களும் அதனைப்புரிந்து வைத்திருக்கிறார்கள் என்று நம்புகிறேன்.
தற்போதைய நாட்களில் உயர்நீதிமன்ற நீதியரசர்களின் ஓய்வு வயதெல்லையை அதிகரிப்பதற்கான முயற்சிகள் குறித்து தீர்க்கமாக பேசப்பட்டுவருகிறது.
40 ஆண்டுகள் அரச சேவையில் இருந்துள்ளேன். எனது அனுபவத்துக்கமைய அந்தத் தீர்மானத்தை நான் அனுமதிக்கிறேன்.
உதாரணமாக, இராணுவ வீரர்கள் 22 ஆண்டுகள் சேவையாற்றி ஓய்வு பெற்றுச்சென்றார்கள்.
40 45 வயதாகும்போது, ஓய்வுபெறும்போது அவர்களால் வேறு வேலைவாய்ப்பையும் தேடிக்கொள்ள முடியாது. அவர்கள் பல்வேறு பொருளாதார நெருக்கடிகளைச் சந்தித்து வருகிறார்கள்.
பொதுவாகப் பார்த்தால், இது சகல அரச ஊழியர்களையும் பாதிக்கிறது. உலக நாடுகளில் ஓய்வுபெறும் வயதெல்லை என்பது பாரிய சிக்கலை உருவாக்கியுள்ளது.
ஆகவே, நீதியரசர்கள், நீதிபதிகளின் ஓய்வு வயதெல்லையை இரண்டு வருடங்களால் அதிகரிப்பதால் நாட்டுக்கு எந்த நஷ்டமும் ஏற்படாது.
அரச அதிகாரிகளுக்கும் இராணுவ அதிகாரிகளுக்கும் ஓய்வு வயதெல்லையை இரண்டு வருடங்களாக அதிகரிக்கவேண்டும் என்றே நான் வலியுறுத்துகிறேன். இதில் குழப்பமடைய வேண்டிய அவசியமில்லை.
குறித்த நீதியரசர் ஒருவர் தொடர்ந்து இருந்தால் தனக்கு எதிராக தீர்ப்பு வழங்கி, தன்னை சிறையிலடைத்து விடுவாரா என்று யாருக்காவது பயம் இருக்குமாக இருந்தால் அதற்கு எதுவும் செய்ய முடியாது.
அது தனி நபரின் பிரச்சினை. பொதுவாக பார்த்தால் இது மிகவும் சிறந்த தீர்மானம். காலத்துக்கு தேவையான தீர்மானமென்றும் கருதுகிறேன்’’ என்றார்.
