இந்திய பாதுகாப்பு அமைச்சர் ஶ்ரீ ராஜ்நாத் சிங் செப்டம்பர் 9 ஆம் 10 ஆம் திகதிகளில் இலங்கை வருகிறார்.
அவரது பயணத்தின்போது இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தின் கடல்சார் பாதுகாப்பு விடயம் முக்கிய இடம் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அமைச்சர் ராஜ்நாத் சிங், இலங்கை ஜனாதிபதியும் பாதுகாப்பு அமைச்சருமான அனுர குமார திசாநாயக்க, பிரதமர் ஹரிணி அமரசூரிய,பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஓய்வுபெற்ற எயார்வைஸ் மார்ஷல் சம்பத் துய்யகொந்தா ஆகியோரைச் சந்திக்கின்றார்.
2025 ஏப்ரல் 5 ஆம் திகதி பிரதமர் நரேந்திர மோடி கொழும்புக்கு வந்தபோது கையெழுத்திடப்பட்ட இந்தியா-இலங்கை பாதுகாப்பு ஒத்துழைப்பு புரிந்துணர்வு ஒப்பந்தத்தை,முழுமையாகவும் சரியான நேரத்திலும் செயல்படுத்துவது குறித்து இந்தச் சந்திப்பில் ஆராயப்படும்.
ஐந்தாண்டு கால ஒப்பந்தமான இது, இரு நாடுகளுக்கும் இடையிலான பாதுகாப்பு ஒத்துழைப்புக்கான முதல் விரிவான புரிந்துணர்வு ஒப்பந்தமாகும். இது இந்தியப் பெருங்கடலில் உள்ள பொதுவான பாதுகாப்பு கவலைகளை நிவர்த்தி செய்வதோடு, இருதரப்பு இராணுவ ஈடுபாட்டிற்கு ஒரு கட்டமைக்கப்பட்ட கட்டமைப்பையும் வழங்குகிறது.
கூட்டு இராணுவப் பயிற்சிகளை மேம்படுத்துதல், திறன் மேம்பாடு, மனிதாபிமான உதவி,பேரிடர் நிவாரண ஒத்துழைப்பு, இரு நாடுகளின் கடற்படைக் கப்பல்கள் துறைமுகங்களுக்கு வருவதை அதிகரித்தல் உள்ளிட்ட பல்வேறு துறைகளை இந்த ஒப்பந்தம் உள்ளடக்கியுள்ளது.
இது பாதுகாப்புத் துறையில் ஒத்துழைப்புக்கான வாய்ப்புகளை ஆராய்வதற்கும் வழிவகை செய்கிறது.
இந்த ஒப்பந்தம் ஐந்து ஆண்டுகளுக்குச் செல்லுபடியாகும்.இரு தரப்பினரும் மூன்று மாத முன்னறிவிப்புடன் இதை முடிவுக்குக் கொண்டுவர அனுமதிக்கிறது. பரஸ்பர உடன்படிக்கையின் மூலம் இதை மேலும் மூன்று ஆண்டுகளுக்கு நீடிக்கவும் முடியும்.
2014-ஆம் ஆண்டுக்குப் பிறகு பிரதமர் மோடி இலங்கைக்கு மேற்கொண்ட நான்காவது பயணமும், செப்டம்பர் 2024-இல் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க பதவியேற்ற பிறகு இந்தியப் பிரதமர் ஒருவர் இலங்கைக்கு மேற்கொண்ட முதல் பயணமுமான, அவரது ஏப்ரல் 2025 பயணத்தின் போது பரிமாறப்பட்ட ஏழு இருதரப்பு ஆவணங்களில் இந்தப் பாதுகாப்புப் புரிந்துணர்வு ஒப்பந்தமும் ஒன்றாகும்.
ஏப்ரல் 2025 பயணத்தின் போது, சுகாதாரம், வெகுஜன ஊடகங்கள், எரிசக்தி, இணைப்பு போன்ற துறைகளை உள்ளடக்கிய ஒப்பந்தங்களும் புரிந்துணர்வுகளும் கையெழுத்தாயின.
இந்தியாவும் இலங்கையும் கடன் மறுசீரமைப்பு தொடர்பான இருதரப்பு திருத்த ஒப்பந்தங்களையும் முடிவுக்குக் கொண்டுவந்தன.
கடல்சார் பாதுகாப்பு,இந்தியப் பெருங்கடல் கரையோர நாடுகளுடனான நெருங்கிய பாதுகாப்பு கூட்டாண்மைகளுக்கு இந்தியா முக்கியத்துவம் அளித்து வரும் சூழலில், ராஜ்நாத் சிங்கின் இந்த பயணம் முக்கியத்துவம் பெறுகிறது.
