பிரித்தானியாவின் இலண்டன் நகரில் இடம்பெற்ற வீதி விபத்தில் 16 வயதுடைய இலங்கை மாணவி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
மெலீஷா பிரேமரத்ன என்ற அம்மாணவி, தனியார் பாடசாலையொன்றில் 12 ஆம் தரத்தில் கல்வி பயின்று வந்தார். கடந்த வியாழக்கிழமை (24) காலை 8.15 அளவில் அவர் வழக்கம்போல் பாடசாலைக்கு நடந்துகொண்டிருந்த வேளையிலேயே இத்துயரச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.
வீதியில் கட்டுப்பாட்டை இழந்த கார் ஒன்று மோதியதில், பலத்த காயமடைந்த மெலீஷா சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.
இவ்விபத்து தொடர்பில் கைது செய்யப்பட்ட 68 வயதுடைய காரின் சாரதி, பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
மாணவியின் மறைவால் அதிர்ச்சியடைந்துள்ள அவரது குடும்பத்தினர், “அவள் எங்கள் வாழ்க்கையின் வெளிச்சமாக இருந்தாள். அவள் இல்லாத ஒவ்வொரு நாளும் அவளது நினைவுகளுடனேயே வாழ்கிறோம்…” என மிகுந்த துயரத்துடன் தெரிவித்துள்ளனர்.
