பிள்ளையானுக்கு விளக்க மறியல் நீடிக்கப்பட்டுள்ளது.
பிள்ளையானை எதிர்வரும் ஜூலை 24ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மட்டக்களப்பு நீதிமன்றத்தில் நிகழ்நிலை ஊடாக இன்று முன்னிலைப்படுத்தப்பட்டு அவருக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன.
2008ஆம் ஆண்டு மட்டக்களப்பு மாவட்டத்தின் சில பகுதிகளில் நிகழ்ந்த ஐந்து கொலைகள் தொடர்பாக, ‘பிள்ளையன் உள்ளிட்டபிற சந்தேக நபர்களுக்கு எதிராக குற்றப் புலனாய்வுத் திணைக்களம் வழக்கு தாக்கல் செய்துள்ளது.
மூன்றாவது சந்தேக நபராக பெயரிடப்பட்டுள்ள சிவநேசதுரை சந்திரகாந்தனை அடுத்த வழக்கில் நீதிமன்றில் ஆஜர்படுத்துமாறு விடுக்கப்பட்ட பணிப்புரையின் அடிப்படையில் இன்று நிகழ்நிலை முலம் ஆஜர்படுத்தப்பட்டார்.
ஐந்து ஆட்கொலை தொடர்பில் சுமத்தப்பட்ட 3 குற்றச்சாட்டுகளின் அடிப்படையிலும் கல்லடியில் உள்ள காணி பிரச்சினை ஒன்று தொடர்பிலும் தாக்கல் செய்யப்பட்ட வழக்குகள் தொடர்பிலேயே இன்றைய நீதிமன்ற விசாரணை நடைபெற்றது.
இதையும் படிக்கலாம்: மட்டக்களப்பு புதுப்பாலம் திறந்துவைப்பு
இது தொடர்பான வழக்கு மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றில் நீதிபதி அ.தர்சினி முன்னிலையில் நடைபெற்றபோது பிள்ளையானுக்கு விளக்க மறியல் நீடிக்கப்பட்டது.
இன்றைய தினம் சாட்சிகளும் நீதிமன்றில் ஆஜரான நிலையில் இது தொடர்பான விசாரணை நிகழ்நிலை முலம் முன்னெடுக்கப்பட்டது. பிள்ளையான் தரப்பில் நீதிமன்றில் 2 சட்டத்தரணிகள் ஆஜராகியிருந்தனர்.
வழக்கை பரிசீலித்த நீதிமன்றம், பிள்ளையானை எதிர்வரும் ஜூலை 24ஆம் திகதி வரை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டது.
