யாழ்ப்பாணத்திலிருந்து கதிர்காம யாத்திரையில் இணைந்த நாய்!

யாழ்ப்பாணம் செல்வச்சந்நிதியிலிருந்து கதிர்காமம் நோக்கி ஆண்டுதோறும் நடைபெறும் பாதயாத்திரையில், இம்முறை பக்தர்களுடன் இணைந்து பயணித்து வரும் நாய் தற்போது சமூக ஊடகங்களில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.

கடந்த 33 நாள்களாக பக்தர்களுடன் தொடர்ந்து பயணித்து வரும் இந்த நாய், முல்லைத்தீவு மாவட்டத்தின் முள்ளியவளை – தண்ணீரூற்று பகுதியில் பாதயாத்திரைக் குழுவுடன் இணைந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

பாதயாத்திரைக் குழுத் தலைவர் ஜெயாவேல் சாமி தெரிவிக்கையில், “இந்த நாய் தானாகவே எங்களுடன் இணைந்தது. அதன் உரிமையாளர் யார் என்பது தெரியவில்லை. எங்களை விட்டுப் பிரியாமல் தொடர்ந்து வந்தது.அதற்குப் பட்டு கட்டி, விபூதி, சந்தனம், குங்குமம் அணிவித்து எங்களுடன் பயணிக்கச் செய்துள்ளோம்” என்றார்.

பக்தர்களின் கூற்றுப்படி, இந்த நாய் அன்னதான உணவுகள், பால், பிஸ்கட்,உரொட்டி போன்ற சைவ உணவுகளை மட்டுமே உட்கொள்வதுடன், கூட்ட நெரிசலான,கடினமான பாதைகளிலும் பக்தர்களுக்கு முன்னால் சென்று வழிகாட்டுவது போல் பயணித்து வருகிறது.

இதேவேளை, திருகோணமலை பகுதியில் பயணித்தபோது நாய்க்கு உடல்நலக்குறைவு ஏற்பட்ட நிலையில், பக்தர்கள் அதனை கால்நடை மருத்துவரிடம் அழைத்துச் சென்று சிகிச்சை அளித்த பின்னர் மீண்டும் பாதயாத்திரையில் இணைத்துள்ளது.

தற்போது வடக்கு,கிழக்கு மாகாணங்களைக் கடந்து பயணித்து வரும் நாய் தொடர்பான காணொலிகள், புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் பரவலாகப் பகிரப்பட்டு வருகின்றன.

விரைவில் உகந்தை மலையை அடைந்து, பின்னர் குமண – யாலை அடர்ந்த காட்டுப் பாதை வழியாக கதிர்காமம் நோக்கிப் பயணிக்கவுள்ள இந்த நாய், பாதுகாப்பாகத் தனது பயணத்தை நிறைவு செய்ய வேண்டும் என பக்தர்கள் தெரிவித்து வருகின்றனர்.

எஸ். ஆர். இரவீந்திரன்