கொழும்பில் பிரமாண்டமாக நடந்த சர்வதேச யோகா தின நிகழ்ச்சி

கொழும்பில் பிரமாண்டமாக நடைபெற்ற 12வது சர்வதேச யோகா தினக் கொண்டாட்டத்தில் 2,000 இற்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜாவின் வழிகாட்டலின் கீழ் கொழும்பு, சுதந்திர சதுக்க வளாகத்தில் இன்று (21) மிகப்பிரமாண்டமாக நடைபெற்றது.

அறிவியல், தொழில்நுட்ப அமைச்சர் பேராசிரியர் கிரிஷாந்த அபேசேனா, பிரதி சபாநாயகர் டாக்டர் ரிஸ்வி சாலிஹ், பெருந்தோட்ட,சமூக கட்டமைப்பு வசதிகள் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப், பிரதி அமைச்சர் நிஷாந்த ஜெயவீர முதலானோர் இந்த யோகா நாள் நிகழ்ச்சியல் கலந்துகொண்டனர்.

“ஆரோக்கியமான முதுமைக்கான யோகா” என்ற உன்னதக் கருப்பொருளை மையமாகக் கொண்டு, 12வது சர்வதேச யோகா தினக் கொண்டாட்டங்கள் இலங்கையில் மிகச் சிறப்பாக நடைபெற்றுள்ளன. இலங்கையிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் ஏற்பாட்டில் கொழும்பு, கண்டி ஆகிய நகரங்களில் இந்நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.

உடல், மன ஆரோக்கியத்தை மேம்படுத்துவதில் யோகாவின் முக்கியத்துவத்தை எடுத்துரைக்கும் வகையில் அமைந்த இந்நிகழ்வில், இலங்கையின் பல பகுதிகளிலிருந்தும் வருகை தந்த யோகா ஆர்வலர்கள், பொதுமக்கள் என 2,000க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு ஒற்றுமையையும் நல்வாழ்வையும் வெளிப்படுத்தினர்.

இவர்களுடன் இணைந்து இலங்கை முப்படைகளின் அதிகாரிகள், இலங்கை காவல்துறை மற்றும் பல்வேறு கல்வி நிறுவனங்களைச் சேர்ந்த மாணவர்களும் மிக ஆர்வத்துடன் யோகா பயிற்சிகளில் ஈடுபட்டனர்.

இந்திய வெளியுறவு அமைச்சு, இந்திய கலாசார உறவுகள் சபை (ICCR), ஆயுஷ் அமைச்சு, மொரார்ஜி தேசாய் தேசிய யோகா நிறுவனம் உள்ளிட்ட பல முன்னணி அமைப்புகளின் கூட்டு ஒத்துழைப்புடன் இந்நிகழ்வு வெற்றிகரமாக நடத்தப்பட்டது.