இந்திய வம்சாவளி தமிழ் மக்களின் மேம்பாட்டிற்கு தொடர்ந்து ஆதரவு

இந்திய வம்சாவளி தமிழ் மக்களின் கல்வி மேம்பாட்டிற்கு இந்தியாவின் தொடர்ந்த ஆதரவு கிடைக்கும் என்று இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா தெரிவித்துள்ளார்.

மலையக கல்வி அபிவிருத்தி மன்றத்தின் (UEDS) 20ஆம் ஆண்டு நிறைவு விழா 2026 ஜூன் 14ஆம் திகதி கொழும்பில் நடைபெற்ற நிலையில் இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகர் சந்தோஷ் ஜா அந்நிகழ்வில் கலந்துகொண்டார்.

கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் மற்றும் கொழும்பு மாநகர சபை மேயர் மாண்புமிகு விராய் கெலி பல்தசார் ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

இரு தசாப்தகாலமாக அர்ப்பணிப்புடன் சேவையாற்றிவரும் UEDS செயற்பாடுகளை பாராட்டிய உயர் ஸ்தானிகர், இந்திய வம்சாவளி தமிழ் மக்களுக்கு அதிகாரமளிப்பதிலும் அவர்களது கல்வி மேம்பாட்டிற்காகவும் இம்மன்றமானது மிகவும் முக்கியமான சேவையினை வழங்கிவருவதாக மெச்சினார்.

அத்துடன் இந்தியா இலங்கை இடையிலான நாகரீக உறவுகள் மற்றும் பகிரப்பட்ட வரலாறு ஆகியவற்றில் இந்திய வம்சாவளி தமிழ் மக்களுக்கு விசேட இடம் இருப்பதாகவும், இரு நாடுகளுக்கும் இடையிலான வாழும் உறவுப்பாலமாக அவர்கள் திகழ்வதாகவும் உயர் ஸ்தானிகர் இங்கு குறிப்பிட்டார்.

மேலும், முழுமையான அபிவிருத்திக்கான உந்து சக்தியாக கல்வி மேம்பாட்டுக்கு இந்தியா வழங்கும் அர்ப்பணிப்பினை மீள உறுதிப்படுத்திய உயர் ஸ்தானிகர் அவர்கள், இலங்கை தோட்ட தொழிலாளர் கல்வி நிதியம் (CEWET) புலமைப் பரிசில் நிகழ்ச்சித்திட்டத்தினை அண்மையில் விஸ்தரித்தமை தொடர்பாக சுட்டிக்காட்டினார்.

இத்திட்டத்தின் கீழ் புலமைப் பரிசில் பெறுபவர்களின் எண்ணிக்கை 350 இலிருந்து 700ஆக இரட்டிப்பாக அதிகரிக்கப்பட்டிருக்கும் அதேவேளை உதவித் தொகையும் அதிகரிக்கப்பட்டுள்ளது. அத்துடன், பல்லாயிரக்கணக்கான இலங்கை மாணவர்கள் மற்றும் தொழில் நிபுணர்களுக்கு பயனளித்துள்ள கலாசார உறவுகளுக்கான இந்திய பேரவை (ICCR) மூலமான புலமைப் பரிசில்கள், இந்தியத் தொழில்நுட்ப மற்றும் பொருளாதார ஒத்துழைப்பு (ITEC) பயிற்சித் திட்டங்கள் மற்றும் ஏனைய திறன் மேம்பாட்டு முயற்சிகள் மூலம் இந்தியா தொடர்ந்து வழங்கி வரும் ஆதரவையும் அவர் குறிப்பிட்டார்.

இந்திய வம்சாவளித் தமிழ் மக்களுக்காக இந்திய அரசு வழங்கியுள்ள 75 கோடி இந்திய ரூபா மதிப்பிலான திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்பட்டு வரும் பாடசாலை உட்கட்டமைப்பை மேம்படுத்துதல், மற்றும் 2,000க்கும் மேற்பட்ட பெருந்தோட்ட பாடசாலை ஆசிரியர்களுக்கான STEM பயிற்சி உள்ளிட்ட பல திட்டங்களையும் உயர் ஸ்தானிகர் அவர்கள் இங்கு சுட்டிக்காட்டினார்.

இந்திய வம்சாவளித் தமிழ் குடும்பங்களுக்கான இந்திய வீடமைப்பு திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்பட்டு வருவதையும், வெளிநாடுவாழ் இந்திய பிரஜைகள் (OCI) அட்டைக்கான தகுதியை இந்திய வம்சாவளியைச் சேர்ந்த இலங்கையிலுள்ள புலம்பெயர்ந்த இந்திய வம்சாவளி மக்களில் ஐந்தாவது மற்றும் ஆறாவது தலைமுறையினர் வரை நீடிப்பதற்கான அண்மைய முடிவு மற்றும் நடைமுறை தளர்வுகள் தொடர்பாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

இலங்கையுடனான இந்தியாவின் அபிவிருத்தி பங்குடைமையானது மக்களை இலக்காக கொண்டதாகவே தொடர்ந்து முன்னெடுக்கப்படுகின்றது என்பதை வலியுறுத்திய உயர் ஸ்தானிகர், இந்திய வம்சாவளி சமூகத்தின் கல்வி மற்றும் சமூக பொருளாதார முன்னேற்றத்திற்கு ஆதரவளிப்பதில் இந்தியாவின் அர்ப்பணிப்பை மீள உறுதிப்படுத்தினார்.

இதேவேளை இந்திய வம்சாவளி சமூகத்தின் நலனுக்காகக் கல்விக்கு ஆற்றிய பங்களிப்பிற்காக, UEDS இன் சாதனையாளர்களுக்கு உயர் ஸ்தானிகர் விருதுகளையும் வழங்கி கௌரவித்தார்.