வீட்டிற்குள் அனுமதி இல்லாமல் நுழைந்து, பெண்ணுக்குப் பாலியல் தொல்லை கொடுத்த ஆடவரைச் சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படையின் அதிகாரிகள் கைது செய்து மகளிர் காவல்துறையில் ஒப்படைத்தனர்.
இதன்மூலம், சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை சென்னையில் தனது முதல் கைது நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.
இந்நிலையில், சென்னை அயனாவரம் பகுதியில் 37 வயதுடைய பெண் ஒருவர் புதன்கிழமை (ஜூன் 10) பிற்பகல் வீட்டில் தனியாக இருந்துள்ளார்.
அந்த நேரத்தில் அதே பகுதியைச் சேர்ந்த சுரேஷ் (36) என்ற ஆடவர் மதுபோதையில் அப்பெண்ணின் வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்து பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதனால், அப்பெண் அதிர்ச்சியில் கூச்சலிட்டுள்ளார்.
சத்தத்தைக் கேட்ட அக்கம்பக்கத்தினர் திரண்டனர். இதையறிந்த அந்த நபர் பெண்ணைத் தள்ளிவிட்டுத் தப்பி ஓடினார். இதுகுறித்து அப்பகுதி மக்கள் காவல்துறைக் கட்டுப்பாட்டு அறைக்குத் தகவல் கொடுத்தனர்.
உடனே சிங்கப்பெண் சிறப்புப் படையைச் சேர்ந்த எஸ்ஐ ராஜேஸ்வரியும், பெண் காவலர்களும் விரைந்து சென்று தப்பியோடிய சுரேஷைத் தேடிக் கண்டுபிடித்து அயனாவரம் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர்.
கைது செய்யப்பட்ட சுரேஷை நீதிமன்ற உத்தரவுப்படி அதிகாரிகள் சிறையில் அடைத்தனர்.
சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை ஆரம்பிக்கப்பட்டபின், பதியப்பட்ட முதல் வழக்கு இது என்பது குறிப்பிடத்தக்கது.
பெண்களின் பாதுகாப்பை மேம்படுத்தும் வகையில் அமைக்கப்பட்ட சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படையை முதல்வர் விஜய் கடந்த 9ஆம் தேதி தொடங்கி வைத்தார்.
